zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்

Sunday, 24 March 2013

குளத்துடன் கோபித்துக்கொண்டு



நாட்டில் நடக்கும் பல விஷயங்களை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் எனக்குள் எழும் எண்ணங்களை எழுதத் தோன்றும். ஆனால் என் எண்ணங்கள் பொதுக்கருத்துக்களுக்கு முரணாக இருப்பதால் எழுதுவதற்கு ஒரு தயக்கம் வருகிறது. இது பயமா? அல்லது சபை நாகரீகமா? தெரியவில்லை. 
ஆயினும் எழுத வேண்டுவது ஒரு தார்மீக கடமை என்று தோன்றும் பொழுது எழுதுவது ஒரு அவசியமாகிறது.
இரண்டு எதிர்வினைகள்.
சில மாதங்களுக்கு முன் விஸ்வரூபம் குறித்த ஒரு சர்ச்சை. இன்று அது கமல்ஹாசனுக்கு லாபமாக முடிந்த விஷயம். அன்று கமலுக்கு சேர்ந்த கூட்டத்தில் ஒரு பகுதியேனும் அன்றும் இன்றும் தண்ணீரின்றி நசியும் விவசாயத்திற்கு சேரவில்லை.
இன்று தமிழகத்தை உலுக்கும் தமிழ் ஈழம். அன்று தொப்புழ்கொடி உறவே என்று அவர்கள் அழைத்த பொழுது சேராத தமிழகம் இன்று அதை எடுத்தது ஏன். இன்று நடக்கும் போராட்டங்களில் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏன் முன் வைக்க வேண்டும். வாழும் தமிழ் மக்களை முன் வைத்தால் போராட்டம் மேலும் ஆதரவு பெருகும்.
இந்திய நடுவன் அரசு ராஜரீதியாக இப்பிரச்சினையை பார்க்கும் விதம் இது போல்தான் இருக்கும். 
தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ்நாட்டில் உள்ளோர் பிரிவினை கோர வழி பிறக்கும், பிறக்கலாம். மேலும் இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாய்ந்தால் அது இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும்.
மத்திய அரசின் மனதை மாற்ற ஒரே வழி. இவ்விரண்டு சந்தேகங்களுக்கும் உரிய உத்திரவாதம் கொடுப்பதே ஆகும். 
இது இல்லாமல் தொடரும் போராட்டம் பலனை அளிப்பது கடினம்.
இத்தலைப்புக்கு காரணம்- என் கருத்துக்கள் வெகுஜன கருத்துக்களுக்கு எப்பொழுதும் வேறுபடுவதால்

Sunday, 14 October 2012

சில அபத்தங்கள்

காலம் காலமாக நம் நாட்டில் எல்லோருக்கும் தேசத்தை உய்விக்க வேண்டுமென்ற கவலை வெகுவாக ஆட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் எல்லோரும் யாரோ ஒருவர் ஜனித்து வந்து செய்ய வேண்டுமென வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு உள்ளே பார்த்து நாமே செய்ய வேண்டுமென்று ஏன் தோன்றவில்லை. எனக்கும் சேர்த்து?

Tuesday, 2 October 2012

நினைத்ததை எழுத இது வரை சோம்பேறித்தனமும் ennui யும் தடுத்துக்கொண்டிருந்தது.
இன்று மறுபடியும் எழுத ஆரம்பிகிறேன்.
என் மகளின் திருமணத்தை மிகுந்த செலவில் என் மனதிற்கு நிறைவாக நடத்தி விட்டு வரும் வழியில் என் இஷ்ட தெய்வத்தின் கோவிலில் வணங்க சென்ற பொழுது அங்கு ஒரு திருமணம். மணமகன், மணமகள், அவர்களுடன் இரு பெரியவர்கள், ஒரு சிறுமி, சுவாமி முன் மாலை மாற்றிக்கொண்டனர்.
மனதின் ஒரு மூலையில் வலித்தது. இந்த திருமணம் இன்னும் நிறைவைக்கொடுத்தது.

Sunday, 18 December 2011

முல்லைபெரியாறு விவகாரம்

இந்த ஆறு அணை விவகாரத்தில் தெ ன்தமிழ்நாட்டில் ஒரு தன்னிச்சையான போராட்டம் எழுந்து வலுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் என் கோயம்புத்தூரிலிருக்கும் நண்பரை கேட்ட பொழுது இங்கு ஒன்றும் நடக்கவில்லையென்றார்.
இது தெந்தமிழ்மக்களின் அடிவயிற்று விஷயம். முல்லைபெரியாற்றுத்தண்ணீர் விகையில் வராவிட்டால் அய்ந்து மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாக வெண்டியதுதான்.
இதன் காரணங்கள் நம்மை நாற்பது ஆண்டு காலமாக ஆள்பவர்களின் முட்டாள்தனமும் சுயலாப நோக்கமும்தான்
இதைப்பற்றி நான் எழுத காரணம் நான் அப்பகுதியைச்சேர்ந்தவன் என்பதால்
விரிவாக பின் எழுதுகிறேன்

Saturday, 12 November 2011

ராஜ்குமாரின் பக்கம்: பிறள்வு

ராஜ்குமாரின் பக்கம்: பிறள்வு: மணி இரவு ஒன்பதரை. இப்பொழுதெல்லாம் சீக்கிரமே அசதி வந்து விடுகிறது. உறக்கமும் விழிப்புமில்லாத ஒரு மயக்க நிலை. நிகழ்காலத்திற்கும், கடந்தவைக்கும...

Sunday, 21 August 2011

பொலி காளை



சங்கர் என்று அழைக்கப்பட்ட சங்கரராமன் நான். என் வாழ்க்கையில் சமூகத்தின் கோரமுகத்தை ஒன்றிரண்டு தடவை நேரே பார்த்திருக்கிறேன். இன்று நான் ஒரு கம்பெனியின் சேர்மன். சென்னையின் முக்கிய சாலையிலிருந்து பிரியும் குறுக்குச்சாலையில் இருந்த அலுவலகத்தில் நான் கம்பெனி நிர்வாகம் செய்துகொண்டிருந்தேன். என் ஆரம்பம் தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தில். கொஞ்சம் நிலமிருந்ததால் ஊரில் பெரிய குடும்பம். விவசாயமும் கொஞ்சம் வியாபாரமும் இருந்ததால் வாழ்க்கை வசதியாக நடந்தது.
பக்கத்தில்இருந்த பெரிய ஊரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். நன்றாக படித்ததால் எனக்கு அப்பொழுதே நல்ல பெயர். பள்ளி முதல் என் கிராமம் வரை எனக்கு நல்ல மரியாதை. அதை எந்த வழியிலும் நான் கெடுக்கவில்லை. பள்ளியில் என்னைவிட மூத்த மாணவர்களுக்கும் நான் பாடம் நடத்தியதால் ஆறுமுகத்தை எனக்கு நன்றாகவே தெரியும்.
ஒரு நாள் பள்ளிக்கு செல்கையில் அந்த சம்பவத்தைப்பார்க்கும் வரை உலகம் குதூகலகமாகவும், நளினமாகவும்தான் தெரிந்தது.உண்மை சரியாக தெரிந்ததில்லை. எல்லோரும் நல்லவர்களே, எல்லோரும் ஒழுங்காகவும் சரியாகவும் நடந்துகொள்வார்கள் என்ற மாயையில் வாழ்ந்து வந்தேன்.
அந்த சம்பவம் அவன் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அப்பா அதை கேள்விப்பட்டவுடனே என்னை ஊரைவிட்டு அனுப்பிவிட்டார். காலையில் அது நடந்தது. மதியத்திற்கு முன் சென்னை செல்லும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஏதோ கனவில் நடந்தது போல் சென்னையில் அத்தை வீட்டில். மறு நாளே ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். எட்டாவதில் தமிழ் வழிக்கல்வியில் இருந்து ஆங்கில வழிக்கல்வி. ஆறு மாதம் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மற்ற மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் பொழுது இதற்கெல்லாம் காரணமென்று நான் நினைத்த ஆறுமுகத்தின் மேல் அளவிலாத கோபமும் எரிச்சலும் எனக்கு ஏற்படும்.
பள்ளியில் பாடங்களும் மற்ற மாணவருடன் ஏற்பட்ட நெருக்கமும் படிப்பில் ஆர்வம் உண்டாக ஊரையும் நடந்தவற்றையும் மறக்கடித்தது.
காலம் என்னை வேறு பாதைகளில் செலுத்த கிராமத்தை விட்டு வெளியே இருக்கும் உலகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பத்தாவது வகுப்பிற்கு வரும் முன்பு படிப்பில் முன்னில். நகரத்தின் வாய்ப்புக்களை நன்றாக உபயோகித்துக்கொண்ட எனக்கு வெற்றி ஒவ்வொரு இடத்திலும் வாய்த்தது. படிப்புமட்டுமில்லாமல் வேலையிலும் வெற்றியே.
எனிலும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கிராமமும் அதன் இழந்த வாழ்க்கைநினைவுக்குவரும். உடனே அதை பாதியில் ஒழித்த ஆறுமுகமும் ஞாபகத்து வருவான்.
ஆறுமுகம் ஜாதிப்பெயரை பெருமையுடன் சேர்த்துக்கொள்ளும் ஆள். அந்த ஜாதியின் முகமாக வன்முறை ஆக்கப்பட்டிருந்தது. கொலைமட்டும் செய்பவர்கள், கொஞ்சம் உயர்வு, அதனுடன் திருடுபவர்கள், கொஞ்சம் கீழ்.

என்னை விட சில வருடங்கள் மூத்தவன். வயது கடந்து பள்ளியில் சேர்ந்ததாலும், சில வருடங்கள் பரிட்சையில் தேராததாலும் பள்ளி இறுதி வகுப்பில் என்னுடன் சேர்ந்த்தான். ஆசிரியர் என்னையும் அவனையும் ஒன்றாக சேர்த்து விட்டார். டே, அவனுக்கு சொல்லிக்குடு. உன்னோட சேர்ந்தா, நல்லா படிப்பாம்டே என்று சொன்ன பொழுது மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன். ஆறுமுகம் நன்றாகவே படித்தான். ஆனால் திடீரென்று வராமல் நின்று விடுவான். ஏனென்று கேட்டாலும் பதில் வராது. பள்ளி செல்லும் வழி என் கிராமத்திலிருந்து, அடுத்த ஊர் நுழையும் வழியில் சந்து திரும்பும் இடத்தில் அவன் வீடு. வலது புறம் அவன் வீடும், இடது புறத்தில் அவன் தாய் மாமன் வீடும். என் ஊருக்கு போகும் பொழுது அவன் வீட்டில் நுழைந்து பேசிவிட்டு போவது வாடிக்கையாகிவிட்டது. அவன் தந்தை இல்லை என்று மட்டும் சொல்லியிருக்கிறான். ஆகவே காட்டையும் வீட்டையும் அவன் தாய் பார்த்துக்கொள்கிறாள். சிறிய தம்பி, தங்கைகள். அவர்கள் யாரும் அவனுடன் அவ்வளவாக ஒட்டி நான் பார்த்ததில்லை. அப்பொழுது அது காரியமாகவும் படவில்லை.
இறுதி ஆண்டின் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் சென்று விட்டு அன்றுதான் ஊர் திரும்புகிறேன். பெரிய பையனாகிவிட்டதாக நினைப்பில் தனியாக ஊர் திரும்ம்பிக்கொண்டிருந்தேன். பள்ளியுள்ள பக்கதூரில் இறங்கி என் ஊருக்கு போகும் பேருந்துக்காக காத்திருக்கவேண்டும். அல்லது ஒரு மைல் தூரம். நடந்து விடலாம். போகின்ற வழியில் ஆறுமுகத்தின் வீட்டிலோ அல்லது வெளியிலோ பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அரட்டையடித்து விட்டு போகலாமென்று அவன் வீட்டுப்பக்கம் போனேன். போகும் வழியில் அந்த கோரத்தைப்பார்த்தேன்.
ஆறுமுகத்தின் தாய்மாமன் எனக்கு முன்னெ நடந்து போய் கொண்டிருந்தான். வேறு வண்டியிலிருந்து இறங்கியிருக்கவேண்டும்.அவன் பின்னே நான் அவர்கள் வீடு நோக்கி போகும் வேளையில்,ஆறுமுகம் கையில் அரிவாளுடன். வரும் ஆபத்தை அவன் மாமன் அறிந்தானோ இல்லையோ. மெதுவாக நடந்து கொண்டிருந்தான். எனக்கே அது ஆபத்து என்று வெட்டு விழுந்தபின்தான் தெரிந்தது.டேய் என்ற சத்தத்துடன் முதல் வெட்டு. ஆறுமுகம்தான் வெட்டினான். சொந்த மாமனை வெட்டுவது நான் கனவில் கூட நினைக்க முடியாதது. கழுத்துக்குக்கீழ் வெட்டு வாங்கியும் ஓடாமல் திரும்பி இடுப்பிலிருந்து சிறிய கத்தியை எடுத்து ஆறுமுகத்தை குத்தப்போனார். ஆனால் அந்த முயற்சியில் முழு மனதாக ஈடுபட்டதாக தெரிய வில்லை. சம்பந்தப்பட்ட இருவருமே ஓடவோ வேறு எந்தவிதத்திலும் உணர்ச்சிவசப்படவோ இல்லை. இறுகிய முகங்களுடன், சாவகாசமாக ஒருவரை ஒருவர் கவனித்துக்கொண்டு ஒரு வாய்ப்புக்காகவும், தற்காப்புடன் சுற்றிவந்துகொண்டிருந்தனர். ஆறுமுகத்தின் மாமா கொட்டும் ரத்தத்தை கண்டுகொள்ளவேயில்லை.
ஆறுமுகத்திற்கு அவர் எந்த வகையிலும் காயத்தைஏற்படுத்தவில்லை. ஆறுமுகத்திற்கு அவரை தாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். ஆறுமுகத்தை தாக்கவோ அல்லது அந்த இடத்தை விட்டு அகலவோ முயற்சிக்கவோஇல்லை.இதை வாய்ப்பு என்பதைத்தவிர வேறு எப்படி விவரிப்பது என்று எனக்குத்தெரியவில்லை.
நடுவீதியில் சுற்றி நிற்பவரை கொஞ்சம் கூட கவனிக்காமல் ஒரு முக்கியமான ஆனால் சாதரணமான காரியத்தை செய்வது போல் ஒருவரை ஒருவர் சுற்றி வந்து கொண்டிருந்தனர். ஆறுமுகத்தின் மாமா தாக்கவோ தற்காத்துக்கொள்ளவோ முயன்றதாக எனக்குத் தோன்றவில்லை. ஆறுமுகத்தை கண்டு கொள்ளவெயில்லை. ஆறுமுகம் அவன் மாமனை இரண்டாவது முறையாக வெட்டினான். அவன் மாமன் சிறிய முனகலுடன் அவனை திரும்பி பார்த்தார். அப்பொழுது கூட அவனிடமிருந்து தப்பிக்கவோ தற்காத்துக்கொள்ளவோ, தாக்கவோ முயல்வில்லை. மூன்றாவது வெட்டில் அவர் கீழே விழுந்தார். ஆறுமுகம் அவசரப்படாமல் அவர் மேல் உட்கார்ந்து கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்து பின் வலது கையையும் வெட்டி தனியாக எடுத்துக்கொண்டு இரண்டையும் ஒரு பையில் போட்டு நடக்க ஆரம்பித்தான். அவன் யாரையும் குறிப்பாக பார்க்கவில்லை, ஆனால் யாரையும் கண்டுகொள்ளாமல் விடவுமில்லை. இது நடக்க ஒரு கால் மணியிலிருந்து அரை மணியாவது ஆகியிருக்கும். முகம் இறுக்கமாக ஒரு உணர்ச்சியுமில்லாமல் இருந்தது. ரத்த சகதியில், தலையில்லாமல் கிடக்கும் அந்த முண்டம் வெகுநாட்களுக்கு என்னை வெருட்டிக்கொண்டிருந்தது. அது அவர் மனிதனாக இருந்தபொழுது வெள்ளை உடையில் சுத்தமாகவும், உயிருடனும் இருந்தார். கிடக்கும் அது அவரில்லை. எனக்கு முன்னே நடந்த மனிதர் கரிய நிறமாக இருந்தாலும் களையானவர். முகத்தில் மண்டியிருந்த வெள்ளை தாடி கூட ஒரு கவர்ச்சியாகத்தான் இருந்தது. சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து அவர், அதுவாக.
எப்படி வீடு வந்தேனென்று இன்று வரை நினைவில்லை. அப்பா மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த பொழுது அம்மா அவரிடம் விஷயத்தை சொன்னாள். உடனே வண்டியில் ஏற்றப்பட்டு சென்னை செல்லும் வண்டியில் பயணித்து அன்று இரவுக்குள் வெகு தூரம் வந்து விட்டேன்.
மீண்டும் ஊர் சென்றது வெகு நாட்கள் கழித்து. அந்த வழி செல்லும் பொழுது மனிதர்கள் சாதாரணமாக அவ்வழி நடப்பது ஒரு அதிசயமாக எனக்கு தோன்றியது. நகரும், அல்ல, ஓடும் காலம் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது.
வருடங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது அந்நினைவுகள் அவ்வளவாக வருத்துவதில்லை. அந்நிகழ்வின் காரணம் தெரியாத்தால் என்னைப்பொறுத்தவரை அது முடிவு பெறாததாகவும் இன்னும் ஏதோ நடந்து அது முடிய வேண்டுவது போலும் எனக்குத்தோன்றும்.
இன்று இவ்வளவு நினைக்கக்காரணம் ஆறுமுகத்தை மறுபடியும் சந்தித்ததால்தான். என் அலுவலகம் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில். வெளிநாடுகள் பலவற்றில் வேலை பார்த்துவிட்டு அங்கு கிடைத்த அனுபவத்திலும், பணத்திலும் உருவாக்கியது. நான் மற்றவனுக்கு உழைத்தது முடிந்து, மற்றவர்கள் எனக்காக உழைக்கின்றனர்.
மாடி உள்ள வீடு வாழ்வதற்கு. பல மாடிகளுள்ள கட்டிடம் அலுவலுக்கு. பணம் ஒரு பொருட்டாக இல்லாமல் வங்கி கணக்கில் கிடந்தது. பணம் பண்ணும் ஆசையை விட, பேர் பண்ணும் ஆசையும், சாதிக்கவேண்டுமென்ற ஆசையும் என்னை செலுத்திக்கொண்டிருந்தது.
அன்று என் காரில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தேன். ஓட்டி வண்டியை ஓட்ட அடுத்த இலக்கை யோசித்தவாறு வெளியே பார்த்த அந்த வேளையில் ஆறுமுகத்தை சென்னை சாலையில் பார்த்தேன். பள்ளியில் பார்த்த பொழுது உயரமாக ஒல்லியாகத்தெரிவான். ஒட்ட வெட்டிய தலையுடன் பூனைமீசை முகத்தில். இப்பொழுது தாடியும் மீசையும் அங்கங்கு நரை. பட்டாபட்டி உள்ளாடைத்துணியில் வேட்டியாகவும் இல்லாமல் கைலியாகவும் இல்லாமல் ஒரு உடை இடுப்பில்.நிறம் மங்கி, சதை தொங்கி, காலம் அவனை வெகுவாகவே பாதித்திருந்தது. தன்னிச்சையாக வண்டியை ஓரத்தில் நிறுத்தச்சொல்லி அவனை பார்க்கச்சென்றேன். அவனுக்கு என்னை சரியாகத்தெரியவில்லை. நான் அவனை நினைத்ததைப்போல அவன் என்னை நினைவில் வைத்திருக்க அவசியம் இல்லை. அன்று அவன் கொலைசெய்யும் பொழுது அவன் எண்ணத்தில் ஆயிரம் இருந்திருக்கும் ஆனால் நான் இருந்திருக்க ஞாயம் இல்லை. என்னில் அந்தக்கொலை ஏற்படுத்திய தாக்கம் அவனுக்குத்தெரிந்திருக்க ஞாயம் இல்லை.
எடுத்துச்சொல்ல்லி ஞாபகப்படுத்தினேன்.
வழ்க்கு கொஞ்ச நாள் நடந்ததாம். தலையையும், மச்சமிருந்த கையையும் வெட்டி எடுத்துக்கொண்டு ஆறுமுகம் மலைப்பக்கமாக கேரளா போய்விட்டானாம். அவனும் அவன் தாயும் ஒரு கிரிமினல் வக்கீலிடம் ஆலோசனை கேட்டு செய்தது. இறந்தது அவன் மாமா என்றே நிரூபிக்க முடியவில்லை, ஆகவே அவனை குற்றவாளியென்று நிரூபிக்கமுடியவில்லை. வழக்கு நடத்த காடுகரையெல்லாம் விற்க வேண்டியதாகிற்று.
சொந்தத்திடம் கெட்டபேர். ஊரைவிட்டு வந்து இங்கே சிறு வியாபாரம் செய்து பிழைக்கிறான்.இன்னொரு மாமன் மகளை கல்யாணம் செய்து கொண்டு பல ஊர்களில் வாழ்ந்து பின் இப்பொழுது இங்கே. அவ்வப்பொழுது செல்லுபடியாகும் சிறு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்துகிறான்.
பழைய விஷயங்களை ஒருவருக்கு ஒருவர் நினைவு படுத்திய போதிலும், அந்த விஷயம்தான் திருப்பி, திருப்பி எங்களை பேசவைத்தது. ஏன் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. மேலோட்டம்மாக பார்த்தால் இவன் அப்பனை, அவன் கொல்ல, அவனை இவன் கொன்று விட்டான். ஆனால் அதுவா காரணம்.
இவன் கொன்ற மாமனின் மகன் இதே போன்று எங்கேயோ அவன் தாயால் ஒரு பொலி காளை போல் வளர்கிறானோ? என்கோ யாரோ இதுதான் வீரம் என்று சொல்லிவிட்டு போய்விட்டதால் ஒரு சமூகமே விலை கொடுக்கிறதா?
அதன் பின் ஆறுமுகத்தை நான் பார்க்கவுமில்லை, அதைப்பற்றி யோசிக்கவுமில்லை.

பானை மண்ணோ பொன்னோ



ஒரு நண்பரின் இடுகையை பார்த்தேன். அவரை ஒட்டியோ, வெட்டியோ எழுதுவது என் நோக்கமல்ல. அதை பார்த்தவுடன் எனக்கு தோன்றியதை எழுதுவதே என் நோக்கம்.
பானை வாங்குவது அதன் கொள்ளும் வசதிக்கே. அது மண்ணாயிருப்பதும், பொன்னாய் இருப்பதும் அவரவர் சௌகரியத்தைப்பற்றிய விஷயம்.
ஆனால் நம்மில் பலர் கொள்வதான அதன் முக்கிய நோக்கத்தை விட்டு விட்டு அதன் வெளிதோற்றமான சுவற்றை பார்க்கிறோம். அது மண்ணா, பொன்னா என்பது முக்கியமாகப்போய்விடுகிறது.
என்ன சொல்லப்ப்டுகிறதென்பது மறைந்துபோய் யார் சொல்கிறார்கள்மென்பது முக்கியமாகிவிடுகிறது.
யார் யார் வாய் கேட்பிலும் என்பது மறந்து போகிறது.
இன்றைய நாட்டு நிலையில் நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் நம் சொந்த சொந்த சிந்தனையிலிருந்து வராமல், யார் சொன்னதையோ, அல்லது சொல்வார்கள் என்ற நினைப்பிலிருந்தோ வருகிறது. மேலும் ஒருவரின் மதிப்பு அவர் என்ன செய்தார் என்பதல்லாமல், அல்லது அவர் சொன்னதை நன்றாக ஆராயாமல், அவர் சொன்னதாலேயெ வேத வாக்காகி விடுகிறது.
ஒரு உதாரணத்திற்கு "தீக்குள் விரலை விட்டால்" எப்படி சிந்தித்தாலும் அது எனக்கு இன்பமாகத்தோன்றவில்லை. என் மதிப்புக்குரிய பாரதி சொன்னதால் அதில் ஏதாவது இருக்குமோ என்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தேன். இன்நிலையில் நான் செய்ய விரும்புவது அவர் சொன்னதில் எனக்கு ஒப்பு இல்லையென்றே. அது இன்பமென்று சொல்வது எனது அறிவை கொச்சைப்படுத்துவதாகவே எனக்கு படுகிறது.
பாரதியை யே நான் கொஞ்சம் உரசிப்பார்த்தால் மற்றவரை நான் ஏன் அப்படியே விழுங்க வேண்டும்?
நான் சொல்வதை நீங்களும் கல்லில் உரசிப்பாருங்கள், அல்லது நிறுத்துப்பாருங்கள். நீங்கள் இதை அப்படியே விழுங்கி வேறு எங்கேனும் வாந்தி எடுப்பது உங்களுக்கோ, எனக்கோ பெருமையல்ல.