நுகத்தடியில் பூட்டிய மாடுகள் தளர்நடை போட்டன. ஏர்க்கால் மணலில் கோடு கிழித்தபடி போனது. ஙீஙீ என்ற சப்தம். காலையில் பூட்டிய ஏரை பதினோரு மணிக்கு அவிழ்த்துவிட்டு கொஞ்ச நேரம் படுத்தேன். பின்பு கொஞ்ச நேரம் தண்ண்ணீர் பாய்ச்சிவிட்டு மறுபடியும் பிடித்த ஏர் ஆறு மணிக்குதான் மாடுகளை அவிழ்த்து வீட்டிற்கு கொண்டு செல்கிறேன். மாலையில் மலைகளுக்கு பின் சூரியன். இன்னும் வெப்பம் குறையவில்லை. சுடும் பாதை மணல் பொத்து போன கால்களுக்கு இதமாக இருந்தது. இடுப்பில் இருக்கும் கோடு போட்ட பட்டா பட்டிடிராயரைத்தவிர உடலில் துணியில்லை. வெயிலில் வழக்கமாக வேலை செய்வதால் பாதம், உள்ளங்கை தவிர மற்ற பாகங்களெல்லாம் கருத்திருந்தன. காலில் சாக்ஸ் போட்டது போல் தூசி.
மனம் வீட்டில் ஆத்தா போட்டுவைத்திருக்கும் சுடுநீருக்கும் குளியலுக்கும் ஏங்கியது. மதியம் தூக்குசெட்டியில் இருந்த பழைய சோற்றை வெங்காயத்துடன் சாப்பிட்டது.சுடுசோறும் காரமான குழம்பும் வீட்டில் இருக்கும். ஒரு பிடியும் ஒவ்வொரு பிடியும் அமிர்தமாக இருக்கும். காற்றில் ஈரப்பதம் தென்பட்டது. மழை வருவதற்கான அறிகுறிகள். எங்கள் காட்டில் நீருள்ள கிணறு இருந்தாலும் மழைத்தண்ணீர் போல பயிருக்கு கிணற்று நீர் உதவாது.
எங்கள் ஆறு ஏக்கர் தோட்டம் மலை அடிவாரத்தின் பக்கத்தில் இருந்தது. ஊரிலிருந்து நாலு கிமீயாவது இருக்கும். அது ஒன்றுதான் இப்பொழுது இருக்கும் சொத்து. குடியானவன் எனும் கூட்டத்தில் இருந்து நிலக்கிழார் என்று சொல்லிக்கொ̀̀ள்ள வைப்பது. இதுவும் போக இருந்தது. அதை பின்னெ சொல்கிறேன். மாலையும் கருக்கும் மேகங்களும் காற்றில் குளிரை கொடுத்தது. ஏர்க்காலில் தூக்குசெட்டிக்குள் போட்டிருந்த வேட்டியை மேலே போட்டுக்கொண்டேன். இன்னும் பாதிதூரத்திற்கு மேல் இருந்தது வீட்டிற்கு. ஆனால் மாடுகள் போகும் வேகத்தில்தான் போகமுடியும். இதுபோல் சூழ்நிலைக்கு ஏற்ப என் நோக்கங்களை மாற்றிக்கொள்வது சமீப காலமாகத்தான்.
இரண்டு வருடங்களுக்க முன்பு வரை ஏர் உழுவேன் என்றோ, வயலில் வேலை செய்வேன் என்றோ நான் கனவிலும் நினைக்க வில்லை. அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை பள்ளியில் நன்றாகவும் படித்தேன். காட்டில் வெயிலில் காயாமல் பிள்ளை சுகமாக வாழவேண்டும் என்பதுதான் என் தாயின் ஆசை. அப்பாவும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. வேறு பிள்ளைகள் இல்லாததால் விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக தந்தை ஏறக்கட்டிவிட்டார். நான் கல்லூரி செல்லும் பொழுது இந்த ஆறு ஏக்கரைத்தவிர நிலம் ஒன்றும் கைவசம் இல்லை. அதுவும் ஏனோ தானோ என்ற விவசாயம். பாதி நாட்களில் நொந்த வெள்ளாமை, அதாவது விதைத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டு அறுவடைக்குத்தான் அடுத்த விஜயம். காடு களையிழந்து களை மண்ட ஆரம்பித்தது.
ஒரே மகன் ஆகையால் எல்லோரைப்போல அரசு கலைக்கல்லூரிக்கு போகவில்லை. சென்னையில் இருந்த பேர் சொல்லும் படியான கல்லூரி. அது ஆண், பெண் இருவரும் படிக்கும் இடம். அங்கு எனது உலகம் மிகவும் விரிய ஆரம்பித்தது. பெண் நண்பர்கள் ஆண் பெண் உறவு காமத்தையும் தாண்டி இருக்கமுடியும் என்று கற்று க்கொடுத்தனர். மேலாடை விலகுவதை கவனிக்காமல் தத்துவங்களை பேசும் பத்மினியின் மாரை விட பேசும் விஷயம் கவர்ந்தது. முதலில் பேச்சால் கவரப்பட்ட நான் அது போன்ற நண்பர்களை மதிக்க கற்றுக்கொண்டேன். கல்வியுடன் உலகநோக்கும் வந்தது.
கல்லூரி பலதரப்பட்டவர்களை சில காலம் ஒரே தட்டில் வைத்திருக்கிறது. அது முடிந்ததும் நம் நிதர்ஸன உலகிற்கு நாம்தான் எழுந்து வரவேண்டும். அதற்கு எனக்கு இரண்டு வருடங்களாகின. சென்னைக்குப்போவதும் வேலைக்கு விண்ணப்பிபதும் முக்கியமான வேலையாகியது. என்ன படித்தாலும் முதல் வேலையை பிடித்துக்கொண்டு அப்புறம் அடுத்ததற்கு தாவ வேண்டுமென்று அப்பொழுது தெரியவில்லை. பலன் இரண்டு ஆண்டுகள் வெட்டியாகத்திரிந்தேன்.
வெள்ளையாக உடுத்திக்கொண்டு ஊரில் திரிவது தப்பாகப்படவில்லலை. வேலைக்குத்தான் இப்பவோ அப்பவோ போய்விடுவோமே, ஆகையால் சும்மா இருப்பது தப்பில்லை என்று சோம்பித்திரிந்தேன்.
இரண்டு விஷயங்கள் என்னை நிஜவாழ்க்கைக்கு தரதரவென்று வலிக்கவலிக்க இழுத்து வந்தன.
வழக்கமாக கலை என்னும் கலைச்செல்வன் பெட்டிக்கடை பின்னால் என் போன்ற வெட்டிகள் கூடுமிடம். கடை நிஜமாகவே ஒரு பெட்டிதான். ஆறடி உயர, அகல, நீள பெட்டி. ஒரு பக்கத்தை திறப்பாக விட்டு விட்டு அதை நான்கடி உயர்கல்தூண்களில் நிருத்தியிருந்தான். சுவற்றிற்கும் கடைக்கும் மூன்றடி இடைவெளி. பகலில் என்போன்றோர் அவனிடம் வாங்கும் சிகரெட் புகைப்பதற்கும், அதே இடம் இரவில் குடிப்பதற்கும் பயன்படும். நான் குடிப்பதில்லை. சென்னையில் நண்பர்கள் வீட்டில் வைன் போன்ற மதுவை அவர்கள் வேண்டுதலுக்காக சுவைத்திருக்கிறேன். இவர்கள் குடிக்கும் சாராயத்தில் சிறிதும் நாட்டமில்லை.
கடிதங்கள் வாங்குவதற்கு செட்டியார் வீட்டிற்கு போகவேண்டும். அவர் கிராமத்தின் சம்பளமில்லாத தபால்காரர். எங்கள் ஊருக்கு தினம் ஒரு முறை வரும் தபால்காரர். செட்டியார் கடையில் ஒரு இலவச குளிர்பானம் குடித்துவிட்டு எல்லா தபாலையும் போட்டு விட்டு போய் விடுவார். எல்லோரும் அங்கு சென்று பெற்றுக்கொள்ளவேண்டும். அவர் கார்டு, தபால் உறை, ஸ்டாம்பு முதலியவற்றை வாங்கி வைத்திருப்பார். வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் காசு கூட ஆகும். வழக்கமாக வீட்டிற்கு உள்ளே சென்று கடிதம் பார்த்துவிட்டு சும்மா பேசி விட்டு வருவேன். அன்றும் உள்ளே பொனேன். செட்டியார் வழக்கத்திற்கு மாறாக "வெளியே உட்காரு தம்பி" என்றார். சுரீர் என்றது.நான் அரசாங்க பட்டியலில் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று குறிக்கப்பட்டவன். எங்கள் கிராமத்தில் அது என்றும் பெரிதாகப்பட்டதில்லை. செட்டியார் என அப்பாவையோ, அம்மாவையோ என்றும் வித்தியாசமாக நடத்தியதில்லை. கைவசம் இருந்த நிலமும் வசதியும் எங்கும் வெளியே நிற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியதில்லை. முதன் முதலாக என் ஜாதி அடையாளம் எனக்கு வலித்தது. அதே வேதனையுடன் கலை கடைக்கு வந்து சிகரெட் கேட்டேன். காசு என்று அவன் கேட்டது அடுத்த அடி. இத்தனை நாள் இல்லாமல் அவன் முதலில் காசு கேட்டது வித்தியாசமாக ப்பட்டது. ஏன் என்று கேட்டதற்கு வேலையில்லாதவனிடமிருந்து காசு எப்படி வசூலிப்பது என்று கேட்டான். அன்று விட்டேன் சிகரெட்டை. வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவிடம் அழுதேன். தம்பி, செட்டியார் வெளியே நிற்கவைத்ததற்கு காரணம் உன் ஜாதியில்லை, உன் பொறுப்பில்லாத நிலைமை என்றாள். இருக்குமோ என்று தோன்றியது.
அடுத்த நாள் அப்பாவுடன் தோட்டத்திற்கு போக ஆரம்பித்தேன். மெதுவாக உழுவதிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதுவரை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தேன். வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. அடுத்த பயிர் ம̀ழைஉழவு என்று முற்றிலும் வேறான பாதையில் வாழ்க்கை போக நேர்ந்தது. என்றோ அனுப்பிய விண்ணப்பங்களுக்கு வேலை காலியில்லை என்ற பதில்களை வாங்கத்தவிர வேறு ஒன்றுக்காகவும் கௌரவ போஸ்ட் மாஸ்டரை போய் பார்ப்பதில்லை. கலை கடையும் அதில் தென்படுபவர்களும் மிகவும் அன்னியமாகிவிட்டனர். வாழ்க்கை என் முன் செல்லும் மாடுகளுடையதைப்பபோல ஒரு வட்டத்திற்குள். அப்பா ரிடையரானவர்களைப்போல திண்ணையில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார்.என்றாவது பத்மினியைப்பொன்ற நண்பர்களிடமிருந்து கடிதங்கள் வரும். அதை த்தவிர கல்லூரி வெளியுலகம் போன்றவை தூரப்போய்விட்டன. இன்னும் இரண்டு கிமீயாவது போனால்தான் வீடு. மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. வடகி̀ழக்கில் மேகம் கூடியதென்றால் மழை நிச்சயம். வடகிழக்கில் கருத்தால் எப்படி மழை வருமென்று ஊர் பெருசுகளிடம் விவாதித்திருக்கிறேன். கல்லூரி செல்லும் வரை. ஒரு நாள் இதை ஹாஸ்யமாக கல்லூரியில் சொல்லப்போய். எம்பைரிஸிஸ்ம் என்ற வார்த்தையை கற்றுக்கொண்டேன். ஒரு நிகழ்வு நடந்த்தால் அதுவும் அடிக்கடிக்கு மேல் நடந்தால் எப்படி என்பதை விட அது நடக்கும் என்பதை ஒத்துக்கொள்ளவும் பின்பு அது எப்படி நடந்தது என்று பார்த்துக்கொள்ளலாம் என்றும் கல்லூரி கற்றுக்கொடுத்தது. இப்பொழுது எனக்கு எப்படி நடக்குமென்பதைவிட நடப்பதுவே முக்கியமாக போய்விட்டது.
யாருமில்லாத பொழுது எதனாவதுடன் பேச வேண்டுமே. மாடுகளுடன் பேசத்தொடங்கினேன். பின்பு அதுவே பழக்கமாகிவிட்டது. நாளில் பெரும்பகுதி அவைகளுடந்தானே. உலகம் மிகச்சுருங்கிவிட்டது. எங்களது ஆறு ஏக்கர் நிலத்தை இப்பொழுது யாரும் விலைக்கு கேட்பதில்லை.
மாடுகள் மந்தகதியில் நடந்தன. உழவுகாட்டில் என்ன விதைப்பது. கிணற்றில் வேண்டிய தண்ணீர் கிடைக்குமா, கால மழை கிடைக்குமா என்று பல நினைவுகள். வீடு வரை இந்த நினைவுகள் கூட வந்தன.
வீடு வந்தவுடன் மாடுகளை அவிழ்த்து கட்டி விட்டு நேரே குளிக்க நுழைந்தேன். சுடு நீர் அலுத்த உடலுக்கு இதமாக இருந்தது. ஒரு வாளி தண்ணீர்தான் குளிக்க கிடைக்கும். ஆனால் அதுவே பழகிவிட்டது. குளித்து வீட்டிற்குள் வந்து சாப்பிட உட்கார்ந்தேன். வட்டிலில் சோறும் குளம்பும் விழுந்த பொழுது அம்மா சொன்னாள். போஸ்ட் மாஸ்டரையா கடிதாசி வந்திருக்குன்னு சொல்லிட்டு போனார்டா. சாப்பாட்டில் மனசு போகவில்லை. ஆனாலும் பசியில் முழுதும் சாப்பிட்டு விட்டுத்தான் எழுந்தேன்.
வெளியே வந்த பொழுது மழை நன்றாக பிடித்துக்கொண்டது. மழையில் போகவேண்டுமா என்று ஒரு எண்ணம் தோன்றினாலும் போய்த்தான் பார்ப்போமே என்று நனைந்து கொண்டே போனேன்.
போஸ்ட் மாஸ்டரின் வீட்டுக்கு போனேன்.
வாங்க தம்பியென்று அவர் கூப்பிட்டது புதிது. வெளியே நின்று கொண்டேன். உள்ளே போவது நிச்சயமாக இல்லை. உள்ளே போய் பழுப்பு உறை ஒன்று கொண்டுவந்து கொடுத்தார். மழை பெய்யும் இரவில் வீட்டினுள்ளிருந்து வந்த வெளிச்சத்தில் எனது விடுதலை வந்திருந்தது தெரிந்தது. என்றோ விண்ணப்பித்து விட்டு வராது என்று நினைத்த அரசு வேலை. மங்கலான தட்டச்சு எனக்கு ரெவென்யு இன்ஸ்பெக்டர் வேலை என்று அறிவித்தது. அடுத்த மாவட்டத்திலுள்ள ஒரு வட்டார அலுவலகத்தில்.
பத்மினியின் உபயத்தில். சென்னையில் ஒரு அதிகார உள்வட்டமிருக்கிறது. அது என்றும் யார் ஆண்டாலும் அதிகாரத்திலிருக்கும். அது வேண்டியவர்களுக்கு அவர்களின் நெருக்கத்திற்கேற்ப வரமளிக்கும். எனக்கு அந்த வரம் கிடைத்தது. அரசு வேலை. இனி ஏர் பிடித்து நிலத்தில் உழ வேண்டியதில்லை. மழை வருமா. பயிர் விளைந்து வீடு வருமா என்ற கவலை இனி இல்லை.
தினமும் காகிததில் உழுது மாத இறுதியில் அறுவடை. வானம் பொய்த்தாலும் விளைச்சல் குறையாது. வெயிலில் காயவேண்டியதில்லை. வருட முடிவில் உப பயிராக ஒரு ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
ஒரு நிமிடத்தில் கிராமமும், விவசாயமும் அன்னியமாகிவிட்டது.
தோளுக்கு ப்பின்னால் செட்டியார் கடிதத்தை படித்து விட்டார். மழை மேலே விழாமல் வீட்டின் முன்வாசலில் நின்று கடிதத்தை படித்துக்கொண்டிருந்தேன். அவர் மகா கரிசனமாக வீட்டுக்குள்ள வந்து உட்காருங்க தம்பி என்றவுடன் சிரிப்பு வந்தாலும், அடக்கிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தேன்.
வீட்டில் சொல்லி விட்டு வேலைக்கு சேர ப்பார்க்கவேண்டும். என்னுடைய காட்டில் இன்று நல்லமழை.