zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: July 2011

Wednesday, 27 July 2011

தமிழ்நாட்டின் தலைவிதி

லட்சக்கணக்கான பள்ளீ மாணவர்களின் எதிர்காலத்தைவிட தன் வரட்டு கௌரவம்தான் பெரிது என்று நினைக்கும் ஒரு அரசி. அவளுக்கு எடுத்துச்சொல்லக்கூட தைரியம் இல்லாத அமைச்சர் கூட்டம். ஏதும் செய்ய வக்கில்லாத மக்கள். இதுவா முன்னேற்றம். இதுவா ஜனநாயகம். ஒருவரிடம் கூடவா மாற்ற வழியில்லை

Sunday, 3 July 2011

கால்கள்


நாச்சிமுத்து ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். அவருடைய வயது கருதி அவரென்றே அழைக்கலாம். பட்டினப்பிரவேசம், வேறு வழியில்லாததால். அன்றும் சரி இன்றும் சரி, ஊரில் பிழைக்க வழியில்லாதவர்கள் ஏதோ ஒரு வண்டியில் ஏறி சென்னை வந்து விடுகின்றனர். நாச்சியும் இதற்கு விதி விலக்கல்ல. வந்த இரண்டாம் நாள் அவருக்கு பிழைக்க வழி கிடத்து விட்டது. அன்று அங்கு அண்ணா சிலையில்லை. ரௌண்டானா என்று அழைக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து சின்ன சாலை பிரியும் இடத்தில் ஒரு கிழவன் செருப்பு தைத்துக்கொண்டிருந்தான். மிகவும் இணக்கமாக அவனடுத்து உட்கார்ந்த நாச்சி வேலை கேட்டான். கிழவனுக்கு இது புதிது. என்னவோ தோன்ற அருகில் உட்கார வைத்து ஊசி நூலைக்கொடுத்து தைக்க கற்று க்கொடுக்க அன்று முதல் நாச்சி கையில் ஒரு தொழில். தொழிலில் அவருக்கிருந்த ஆர்வம் செருப்பு தைப்பதிலும் ஒரு உயர்தரத்தை அடைய உதவியது.
காலம் ஓட அந்த இடம் அவரது பட்டா இல்லாத சொந்தமாகியது. காலையில் எட்டு மணிக்கே கடை போட்டுவிடுவார். தொழிலாளியின் பிய்ந்த செருப்பாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த ஷூவாக இருந்தாலும் சரி, தொழிலில் ஒரு தரமிருக்கும். என்றைக்கும் இவ்வளவு வேண்டுமென்று கேட்டதில்லை. கொடுப்பதை அப்படியே வாங்கி உட்கார்ந்திருக்கும் சாக்குகிற்கு கீழே போட்டு விடுவார். சும்மா இருக்கும் நேரம் போகிற வருகிறவர்களின் கால்களை பார்த்து கொண்டிருப்பார்.  பல நேரங்களில் தொழிலே அதுவாகவும் அதற்கு வசதிக்காக செருப்பு தைப்பதாகவும் அவருக்கு தோன்றும். அவருக்கு முகங்களை விட கால்களே அழகு என்று தோன்றும். அழக்காக முகச்சாயம் பூசி கால்களின் பித்த விரிவுகளை கவனிக்காதவர்கள் மீது அளவிலாத கோபம் தோன்றும். அவருக்கு அழகென்று தோன்றும் கால்களுக்கு தலைக்கு கிரீடம் சூட்டுவது போல் செருப்பு தைத்து கொடுக்க ஆசை வரும்.
தொழிலில் தரமிருந்தால் இன்றில்லையெனில் நாளை ஒரு நாளேனும் வெற்றியும் புகழும் வருமாமே. அவருக்கு மெதுவாக வாடிக்கைகள் வர ஆரம்பித்தது. அவரிடம் செருப்பு சரி செய்தவர்கள் செருப்பு புதிதாக தைக்க கொடுத்தார்கள். அவர் தைத்த செருப்புகள் பார்வையாக இருக்காது, ஆனால் சௌகரியமாக இருக்கும். கால்களுக்கு வடிவாகவும் இருக்கும். நிச்சயமாக வெகு நாள் உழைக்கும். சௌகரியமில்லாத செருப்பு கடித்து துன்புற்றவனுக்குத்தான் தெரியும் நாச்சியின் அருமை. இன்னும் நாளாக ஆக அவர் கால்களுக்கு ஒரு மாதிரியாக வைத்தியமும் சொல்ல நேர்ந்த்தது. அதற்கு காரணம் கன்னியப்பன். அவன் சென்னையின் ஆதிகுடி. பல தலைமுறைகளாக சென்னையில் வசிப்பவர்கள் இவர்கள். இவர்களிடம் சொந்த வீடு இருந்தால் சென்னையின் பழைய பகுதிகளில் இருக்கும். அல்லது வேறு பகுதிகளில் வாடகைக்கு குடியிருப்பர். கன்னியப்ப்னின் மூதாதையையர்கள் சொந்த வீட்டில் எந்த காலத்திலும் குடியிருந்தவர்களல்லர். வானமே கூரையாய், பூமியே படுக்கையாய் தலைமுறைகளாக பட்டினத்தில் வாழ்பவர்கள். யாரும் மாதசம்பளத்திற்கு வேலை பார்த்ததில்லை. கன்னியும் அந்த வழியை தொடர்ந்தான். நாச்சியை அவன் சந்திக்கும் வரை. அவன் ஏதோ ஒரு கூலி வேலை செய்து கொண்டிருந்தான். நாச்சியின் கடையை கடந்து போகும் பொழுது  செருப்பு தைத்து கொடேன் என்று கேட்டான். மறு பேச்சில்லாமல் செருப்பு அவனுக்கு கிடைத்தது. நாளைக்கு காசு கொடுக்கிறேன் என்று விட்டு போய்விட்டான். காசு கொடுப்பதாக அவனுக்கு அபிப்ராயம் அவனுக்கு இருக்கவில்லை. பல மாதங்கள் கழித்து அந்தப்பக்கமாக அவன் வந்த பொழுது அங்கு உட்கார்ந்திருந்த நாச்சியை பார்த்து சிரித்து விட்டு போய்விட்டான். அப்பொழுதும் காசு கொடுக்கவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு இல்லை. அப்பொழுது கன்னியப்பனுக்கு வினை போலீஸ்காரன் ரூபத்தில் வந்தது. கன்னியப்பன் போன்றோருக்கும் போலீஸ்காரர்களுக்கும் ஏதொ ஒரு வகையில் உறவோ, பகையோ இருக்கும். கழுத்தில் கை விழுந்ததும் கன்னிக்கு போலீஸ் அடிவிழும் என்று ஓட முயற்சித்தான். நாச்சி அவனைத்தடுத்து போலீஸிடம் பேசிஅவனை விடுவித்தார். கன்னிக்கு வாழ்க்கையில் திரும்ப திரும்ப ஏமாறும் ஒருவனைப்பார்க்கிறோமோ என்ற எண்ணம் ஒரு நிமிடம் தோன்றியது. நாச்சியின் நட்பு தேவை என்ற எண்ணமும் தோன்றியது. நாச்சியைகெட்டியாகப்பிடித்துக்கொண்டான். நாச்சியோடு உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தான். எனக்கும் ஒரு தொழில் பார்த்து குடேன் என்று சொல்லும் பொழுது கூட முழுமனதுடன் சொல்லவில்லை. இன்றும் ஏதாவது தேத்திக்கொண்டு போவதுதான் எண்ணமாக இருந்தது. ரிக்க்ஷா வாடகைக்கு பிடித்து தரேன், ஓட்டிக்கெயேன் என்று நாச்சி சொன்னவுடன் செய்துதான் பார்ப்போமே என்று ஆரம்பித்தது தொடராகி விட்டது. நாச்சி வேலை பார்க்கும் சாலையோரமே இரவு முடங்கி விடுவார். காலைக்கடன் கார்ப்பரேஷன் குளியலரையில். உணவு சோத்துக்கடையில். இரண்டு வேட்டி,சட்டைக்கு பெரிதாக பெட்டியோ,பீரோவோ தேவைப்படவில்லை. கன்னியப்பன் நாச்சியை முதல் தடவையாக ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றான், பிறகு அதுவும் வழக்கமாகி விட்டது. கன்னியும், நாச்சியும் தேவையினால் மட்டுமல்ல, சினேகத்தினாலும் கூடியிருக்க ஆரம்பித்தனர். கன்னியப்பன் போன்றவர்கள் சேர்கையினாலும் நல்லவராவதுண்டு. கன்னி ஏய்த்துப்பிழைக்கும் வாழ்க்கையை விட்ட பொழுது, நாச்சியின் சிபாரிசால் ஒரு ரிக்க்ஷா வாடகைக்கு கிடைத்தது. பிழைப்பதற்கு வழி கிடைத்தவுடன், நாச்சியிடம் ஒரு சொந்தம் பாராட்ட ஆரம்பித்தான்.  ஒரு ப்ரொப்ரைடரி சொந்தம், ஒரு உரிமை. நாச்சிக்கு, நல்லது, கெட்டது எல்லாம் அவன் முடிவு போல்.
ஒரு நாள் கன்னி முடிவு செய்து நாச்சியை கட்டுகுண்டாக தூக்கிச்சென்று ஒரு அறையில் வாடகைக்கும் அமர்த்தியாயிற்று. தினமும் கன்னியின் வண்டியில் காலையும் மாலையும் சவாரி. ஏறிக்கொண்டே போகும் செலவுக்கும் கூடவே வருமானம் வந்த்ததால் வாழ்க்கையில் பிரச்சனையில்லை.
நாச்சியின் வாழ்க்கையிலும் ஒரு மாதிரி வசந்தம் வந்தது. செல்லியின் ரூபத்தில். செல்லி பட்டினத்தின் பக்கமுள்ள கிராமங்களில் ஒன்றிலிருந்து பிழைப்புக்காக சென்னை வந்தவள். பதினாறு வயதில் உடம்பு  இருந்தாலும் அவ்வளவு விவரமில்லை. யாரோ ஒருவன் வேலை வாங்கித்தருகிறேன் என்றவுடன் உடன் வந்து விட்டாள். அவன் நாச்சி இருந்த தெருவில் அவளை அழைத்துச்செல்லும் பொழுது அவளுக்கு என்ன தோன்றியதோ, அங்கேயே நின்று நாச்சியைப்பார்த்தாள். அவளை பக்கத்தில் உட்காரச்சொல்லி அவளின் கதையைக்கேட்டார். அவரின் சகா கன்னியப்பன்உடன் கலந்து ஒரு வீட்டைப்பிடித்து குடிவைப்பது என்று முடிவாகியது. ஆரவாரமோ, ஆர்ப்பரிப்போ இல்லாமல் அவர்கள் வாழ ஆரம்பித்தார்கள்.
பலரின் வாழ்க்கை இ து போலத்தான் ஆரம்பிக்கிறது. நாச்சி வேலையை முடித்து அங்கேயே தங்காமல் வீட்டுக்கு போக ஆரம்பித்தார். கன்னியப்பன்தான் வாகனஓட்டி. காலையில் வீட்டிலிருந்து கொண்டு வந்து விட்டு விட்டு சவாரி போவான். இரவில் திருப்பிக்கொண்டு விடுவான்.
வாழ்க்கை அது போக்கில் போக அவர்களும் வாழ ஆரம்பித்தார்கள். காலத்தின் ஓட்டத்தில் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் வளர்ந்து பள்ளி சென்று படித்து பின் வேலைக்கும் போக ஆரம்பித்தனர்.
வாழ்க்கைத்தரம் உயர உயர தந்தை செருப்பு தைப்பது இழிதாகப்பட்டது. நாச்சியும், செல்லியும் அது பிடிக்காதவர்கள் வெளியே போய்விடலாம் என்றதும், பிள்ளைகள் யாரும் அதைப்பற்றி பேசுவதில்லை. மருமகள்களும், மருமகன்களும்,  பின்பு பேரன், பேத்திகளும் வந்த போதிலும் நாச்சியை யாரும் எதுவும் சொல்வதில்லை.
ஒருவனின் வாழ்நாள் சிலவரிகளில் எழுதப்பட்ட பொழுதும், நாச்சியின் வாழ்க்கை அதையும் தாண்டியும், அதற்கு மேலும்.
வாடிக்கையாளர்கள் அதிகம் வந்த பொழுதும் நாச்சி ஓரளவுக்கு மேல் தொழில் செய்வதில்லை. பிள்ளைகள் சம்பாதிப்பதால் நாச்சி ஒரு மாதிரியாக ஓய்வு எடுக்க ஆரம்பித்தார். ஆனாலும் கன்னியப்பன் தினம் அழைத்துக்கொண்டு போவதும், வருவதும் தொடர்ந்தது.
அன்றும் அது போல. இரவு கன்னியப்பன் அழைத்துச்செல்ல வந்த பொழுது நாச்சி உட்காரும் இருக்கையில் இருந்த சக்கரங்களில் ஊர்ந்து ரிக்ஷாவில் ஏரி உட்கார ரிக் ஷாவும் புறப்பட்டது.