zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: February 2011

Sunday, 20 February 2011

அன்னியமாகுதல்

நான் வெட்டுப்பட்டு வீழ்ந்த அந்த கணத்தில் நான் என் ஊரின் கொள்கைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்தும் எவ்வளவு அன்னியமாகிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். சாகும் தருணத்தில் வாழ்ந்த வாழ்வு முழுவதும் ஒரு கணத்தில் தோன்றுமாமே. அது எனக்கு வாய்த்தது.
என் வாழ்க்கை முழுவதும் கண் முன் தோன்றினாலும் சொற்ப விஷயங்களையே எடுத்துரைக்க முடியும். இதை நீங்கள் படிக்குமுன் என் வாழ்வு முடிந்திருக்கலாம், அல்லது நான் பிழைத்திருக்கலாம். அது முக்கியமல்ல. என் உணர்வுகளும் அனுபவங்களும் உரைக்கப்பட்டு, நினைவில் வைக்கப்பட வேண்டும்.
முதல் காட்சி. சிறு கிராமமான எனது ஊரில் நாங்கள் மேலும் இல்லாத கீழும் இல்லாத ஒரு ஜாதி. நடுவாந்திரமாக இருந்தாலும், வசதியினாலும், எண்ணிக்கையினாலும் மேல் தட்டில் இருந்தோம். அடுத்தவனை அழுத்தி வைத்திருப்பது, வாழ்க்கைக்கு தேவையாக இருந்தது, மேலும் சௌகரியமாகவும் இருந்த்தது. பழக்கத்தில் இருப்பதை மாற்ற எனக்கு தோன்றவும் இல்லை. தோன்றியிருந்தாலும் மாற்றி அமைக்க என்னால் தனியாக முடிந்திருக்காது.
ஊரில் வலிமையான ஜாதி என்றாலும் அரசு ஏடுகளில் பின் தங்கியவர்களாக கருதப்பட்டோம். அதில் உள்ள ஆதாரமான அபத்தம் யாருக்கும் தோன்றவில்லை. என் கிராமம் ஒரு தனித்தீவல்லவே. படிப்பிற்கும், பிழைப்பிற்கும் மற்ற இடம் செல்லும் பொழுது அங்கு பற்றும் கொம்புகள் எங்கள் எண்ணங்களை மாற்றுவதற்கு பதிலாக மேலும் ஆழமாக பதிக்கவே உதவியது.
ஊரில் அடிமைப்பட்டு கிடந்தவன் நேர் கொண்டு பார்ப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. அதன் விளைவாக வார்த்தையிலும் செயலிலும் மோதல்கள். என் சின்ன உலகை நகரம் விசாலப்படுத்தவில்லை. அல்லது நாங்கள் அதை அனுமதிக்கவில்லை. வன்மம் கொண்டு அலைவதும், சந்தர்ப்பத்தில் அடுத்த கும்பலைச்சேர்ந்தவர்களை தாக்குவதும் வழக்கம். அது போல் ஒரு நிகழ்வில் ஒரு பெண்ணை சந்தித்தேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எங்கள் சண்டை எவ்வளவு சிறுமையானது என்று நான் அறிந்த நாள். கைகலப்பில் அன்று எங்களுக்கு வெற்றி. எதிரியென்று நான் நினைத்தவர்களில் பலருக்கு அன்று ரத்த காயம். பட்டினத்து தெருவில் ஜனம் சுற்றி நின்று பார்க்க யுத்தம். எங்களுக்கு வெற்றி. மார் உயர்த்தி, கால் பரப்பி நடந்தோம். பார்த்த பலரின் அறுவெறுப்பும், ஆதங்கமும் கண்களுக்கு படவில்லை.பலர் சேர்ந்து சிலரைத்தாக்கும் பொழுது பயமில்லை. வேட்டையாடும் கோர வெறி, குறையும் பொழுது, புணர்ந்து எழும் பொழுது ஏற்படும் ஒரு  உணர்வைப்போல சுகமான ஒரு சோர்வு தெரியும். என் இந்த போதைகளையும் மீறி அந்த நாற்பது வயது வேற்று நாட்டுப்பெண்ணின் முக பாவங்கள் மனதில் பதிந்தன. அன்று அக்கணம் என்னைத்தாக்கவில்லை. அது வேறு ஒரு கணத்தில் நடந்த்தது.
காலம் என்னை நதியில் மிதக்கும் சருகைப்போல வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்த்தது. படித்ததும் பட்டம் வாங்கியதும் அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத வேலை அமைந்ததும் சாதாரணர்க்கு ஏற்படுவதைப்போல எனக்கும் ஏற்பட்டது.
வேலையினால் வெளிதேச வாழ்க்கை.படிப்பு வேலையையும் தாண்டி தோல் நிறத்தால் கீழென்று மதிக்கப்படும் சந்தர்ப்பங்கள். சிறுபான்மையை சேர்ந்த ஒருவன் நேரடியாகவும் மறைமுகமாகவும் நசுக்கப்படுவது வலித்தாலும் என்னுள் வேறு மாற்றங்களை என் ஆதார துவேஷங்களை மாற்றும் தருணங்களை ஏற்படுத்தவில்லை.
காட்சி இரண்டு.
வேலை பார்க்கும் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் செல்ல வண்டியிருந்ததால் எனக்குள் ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு வெளி உலகில் ஒட்டாமல் வாழ முடிந்த்தது. அலுவலகத்தில் வேலை நிமித்தம் சந்திப்பவர்கள் உண்மையாக பழக நேர்வதில்லை. வேலை தாண்டி உறவு இல்லாத்தால் அவர்கள் என்னைப்பற்றி உண்மையாக என்ன நினைக்கிறார்கள் என்று அறிவதற்கான சந்தர்ப்பங்களும் அமைய வில்லை. மூன்று அல்லது ஆறு மாதங்களே அவர்களுடன் இருக்க வேண்டியிருந்தது. ஆகவே ஒட்டோ உறவோ ஏற்படவும் இல்லை. ஒரு நாள் இன துவேஷத்தை நேருக்கு நேர் அனுபவிக்கும் வரை. அன்று நகரத்தின் மையத்தில் உள்ள கடைகளுக்கு சென்றேன். மிக குறைந்த விலையில் பொருட்கள் அங்குதான் கிடைக்கும். பார்ப்பதற்கு பார்வையாக ஷோகேஸில் வைக்கும் பொருட்கள் ஒன்றுக்கும் உபயோகமில்லாதவையாக் ஆனால் வெகு நாட்கள் பார்வையிலும் நினைவிலும் இருக்கும். குறைந்த விலை என்று கணிக்க முடியாது. அதே பொருட்கள் மற்ற கடைகளில் விலை அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் சிலருக்கு வாங்கிக்கொண்டு கொடுக்க வேண்டும். இதெல்லாம் வெளிதேச வாழ்க்கையில் சகஜமான விஷயங்கள். குளிர்காலத்தில் சீக்கிரம் இருட்டி விடும். மாலையில் சென்று பொருட்கள் வாங்கிகொண்டு நண்பர்களை பார்த்துவிட்டு வரவேண்டும். கடை கடையாக ஏறி இறங்கி பார்த்துக்கொண்டே வந்த்ததில் வழி தப்பி ஒரு தெருவில் நுழைந்து விட்டேன். வெளி நாடுகளில் ஆபத்திற்கும், பத்திரத்திற்கும் ஒரு தெருதான் வித்தியாசம். ஆபத்தும் திடீரென்று வரும். சில அடிகள் நடந்தவுடன் பின்னால் காலடிகள் கேட்டு திரும்பினேன். பதினேழு பதினெட்டு வயதுடைய நான்கைந்து சிறுவர்கள். வயது குறைவாக இருந்தாலும் தடி மாடுகள். புத்தியும் அந்த அளவில்தான் இருக்கும். தனியாகவோ, போதையில் இல்லாமலோ இருந்தால் பயமில்லை. இவ்விரண்டில் ஏதாவதொன்றோ அல்லது இரண்டும் சேர்ந்திருந்தாலோ உயிருக்கோ உடமைக்கோ ஆபத்து. என்ன செய்வதென்று தெரியவில்லை.
அட்ரீனலின் உடலில் பாய ஓடவோ, சண்டை போடவோ தயாரானேன். எதிர்த்து நிற்பவனை தாக்க யாராவது ஒருவன் ஆரம்பித்தால் மற்றவர்கள் வேட்டை நாய் போல் பாய்வார்கள். அதற்கு முன் ஏதாவது நடந்தால் தப்பிப்பேன். சண்டை போட தயாரானேன். திடீரென்று தெருமுனையிலிருந்து சப்தம். ஒரு இந்தியப்பெண். பெருங்குரலில் கத்திகொண்டு கையையும் காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். கூட்டம் கூட அரம்பித்தது. பையில் இருந்து காசையும் பணத்தையும் எடுத்து அவர்கள் முன்னால் வீிசினாள். அவர்கள் குனிந்து பணத்தையும் பொறுக்க ஆரம்பித்தனர். மெதுவாக நடுவில் புகுந்து நகர்ந்தேன்.காசா நானா என்று அவர்கள் முடிவு செய்வதற்குள் நாங்கள் ஓட ஆரம்பித்தோம். எனக்கு மூன்று தப்படிகளுக்கு முன் அவள் ஓடிக்கொண்டிருந்தாள். உயிராபத்திலும் அவளது பின்புறம் என்னை கவர்ந்தது. ஏதோ உணர்வில் திரும்பிப்பார்த்தவள் என் பார்வையின் திவிரத்தில் தடுமாறி விழப்போனாள். உணர்வின் பால் யோசிக்காமல் அவளைப்பிடித்து கீழே விழாமல் தடுத்தேன். உடல் தொட்டது எங்கள் இருவருக்கும் உணர்ச்சிகளை தூண்டியது. வேகத்தை குறைத்து நடக்கலானோம். ஆசுவாசப்படுத்திக்கொண்டு பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம். இருவருக்கும் பிரிய மனமில்லை. தயங்கித்தயங்கி பேச்சை வளர்த்தோம். மீண்டும் சந்திக்க முடிவுடன் பிரிந்தோம். இந்த நிகழ்வில் ஏனோ அன்று முன்பு பார்த்த வெளி நாட்டு பெண்ணின் முகம் அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளும் நினைவில் வந்தன. இன்னும் அந்த உணர்வின் தாத்பரியம் இன்னும் பிடிபடவில்லை.
அவள் பெயர் தேன்மொழி. மென்பொருள் தொழிலில் ஒரு இந்திய கம்பெனியின் வெளி நாட்டு அலுவலகத்தில் வேலை. மற்ற வேலைசெய்வோருடன் தங்கியிருந்தாள். நமது நடத்தையை நிர்ணயிக்கும் அந்த நாலு பேர் இங்கு இல்லாததால் எங்கள் பழக்கம் தொடர்ந்தது. அவளை எனக்கு பிடித்திருந்தது. உறவு பழக்கத்தில்இருந்து அடுத்த கட்டத்திற்கு சென்றது. மணந்து கொள்ள முடிவு செய்த பொழுதுதான் அவள் ஜாதியும், ஊரும் தெரியவந்தது. அவள் எங்கள் எதிர் ஜாதி. ஊரும் ஊருக்கு அடுத்து. அவள் சொந்தம் எங்கள் ஊரில் எங்களுக்கு எதிராக. இருவரும் இதை எப்படி எதிர்கொள்வது என்றே சிந்தித்தோம். முடிவை மாற்றிக்கொள்ள இருவருக்கும் தோன்றவில்லை. மணந்து கொள்வதற்கு முன் வீட்டிற்கு சொல்லி சம்மதம் கேட்பதில் அர்த்தமில்லை.தீவிரமான எதிர்ப்பிருக்கும். மணந்து கொண்டு வீட்டிற்கு சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். மணமும் முடிந்து ப்ரணவும் பிறந்தான். அவன் மூன்று வயதை அடையும் வரை நாங்கள் இந்த நாட்டுக்கு வரவில்லை. கடிதங்கள் முதலில் கோபமாக வந்தன. பின்பு அதுவும் நின்று விட்டன. தின வாழ்க்கையில் ஊரும் அதன் கோபங்களும் பின்சென்று மறைந்து விட்டது. ஊருக்கு திரும்பி நகரத்தில் தங்கி விட்டோம். ஒரு நாள் என் பெற்றோர் அழையாமல் சொல்லாமல் வீட்டுக்கு வரும் வரை.
ஆத்தா சாகக்கிடக்காப்பா. ஒரு எட்டு வந்து பாத்துட்டு போயிடுப்பா. மகன் எப்படியிருக்கிறான் என்ற கேள்வியில்லை. மருமகள் இருப்பதாக காட்டிக்கொள்ள வில்லை. சிரிப்பு வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் உட்காரவும் சாப்பிடவும் அழைத்தேன். ஆத்தா என்று சொன்னது என் பாட்டியை. என்னை வளரும் வரை மண்ணில் விடாமல் வளர்த்தவள். பாசம் போகச்சொன்னாலும் போகப்பிடிக்கவில்லை. மெதுவாக சொல்லி அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தேன். சாப்பிடாமலே புறப்பட்டு விட்டனர். ப்ரணவிடம் மட்டும் சொல்லிவிட்டு ஏதோ கையில் கொடுத்து விட்டு போனார்கள்.
ஊரிலிருந்து வந்த ஒரு கடிதம் எங்களை ஊருக்கு கொண்டு சேர்த்தது.ஆத்தா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தது. ஊரில் வந்து இறங்கியதும் ஜாதிக்கட்டுப்பாட்டை மீறிவிட்டதால் பஞ்சாயத்துக்கு வருமாறு உத்தரவு. அது எங்களுக்கு அர்த்தமற்றதாகத்தெரிந்தாலும் போவதென்று முடிவு செய்தோம். வீட்டில் போய் நுழைந்தவுடன் ஆத்தாவை நாங்கள் இருவருமாக பார்த்தோம். ஆத்தா என்னுடனும், ப்ரணவுடன் நன்றாக பேசினாள். தேனைஅவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. எதிர் பார்த்ததால் பெரிதாக அதிச்சியடைய வில்லை. மனைவியை வீட்டில் இருக்கச்சொல் லி விட்டு பஞ்சாயத்து நடக்குமிடத்திற்கு தனியாகப்போனேன். ஜாதியிலிருந்து தள்ளி வைப்பதாக தீர்ப்பு சொன்னார்கள். அதுவும் எதிர்பார்த்ததுதான். திரும்பி வரும்பொழுது தேன் எதிரே வந்தாள். அப்பொழுதுதான் எதிர்பாராதது நடந்தது.
என் தம்பி கையில் அரிவாளுடன் ஓடி வந்தான். பதினே̀ழு வயது. நான் வீட்டை விட்டு போகும் பொழுது பள்ளி போக ஆரம்பித்தவன். முகத்தில் அவ்வளவு குரோதம். செய்த பாவத்திற்கு தண்டனை கொடுக்கும் தேவதூதன் போல முகம். அனிச்சையாக முன்னே ஓடி தேனை என் பக்கம் இழுத்தேன். நான் பார்த்து வளர்ந்த அவன் அரிவாளை தூக்கும் பொழுது தாக்க ப்படுகிறோம் என்ற பயம் வரவில்லை. ஒரு விபத்தை தடுக்கும் உணர்வே தூக்கி இருந்தது. அவளை இழுத்து போடும்பொழுது அரிவாள் என் மீது பாய்ந்தது. கூர்ந்த முனை என் இடது தோளில் பாய்ந்து கீழே விழுந்தேன். ரத்தம் நான் பிறந்த மண்ணில் ஓட அரம்பித்தது. தான் செய்த காரியத்தின் விளைவு என் தம்பியை அங்கேயே சிலையாக நிற்க வைத்தது. இவ்வளவும் ஓடி நின்ற அந்த கணங்களில் அந்த நாற்பது வயது தாயின் உணர்ச்சிகளுக்கு அர்த்தம் புரிந்தது. "ஏண்டா மடையர்களா, உங்களுக்குள் என்ன வேற்றுமைகளுக்காக இப்படி அடித்துக்கொண்டு சாகிறீர்கள்?”

Sunday, 13 February 2011

தூர தேசத்திலிருந்து

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து தமிழ் நாட்டை பார்க்கும் பொழுது ஒரு சமச்சீர்தன்மை வரவேண்டும், ஆனால் வரவில்லை. சமகால நிகழ்வு கள் எம்மைப்போன்றோர்களை நிதானமாக Neutral ஆக இருக்க விடுவதில்லை.
அஙகு இருக்கும்பொழுது இருந்த biasகள் இஙுகும் எங்களைத்தொடர்கின்றன. அங்கு நடக்கும் அரசியல் விஷயங்கள் மிககவலையை ஏற்படுத்துகின்றன. அங்கு இருப்பவர்கள் ஏதேனும் செய்க.
ஏதும் முடியா ஒருவன்

Sunday, 6 February 2011

வாடகைக்கு இடம்

அந்த சாலையோரம் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தேன். நேரம் மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மழை பெய்து மீண்டும் பெய்வதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. காலடியில் ஈரமண்ணும் லேசான சகதியும் கால்சட்டையின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டிருந்த்தது. வெளிச்சம் மங்கிய இரவில் நான் வந்த நகரத்தின் வெளிச்சம் லேசான ஒளியை கொடுத்துக்கொண்டிருந்த்தது.தார் சாலை மழையின் ஈரத்தில் ஒளியைப்பிரதிபலித்து  ஒரு கருநாகம் போல்  பளபளத்துக்கொண்டிருந்த்தது.
நான் நின்று கொண்டிருந்தது ஒரு பிரதான சாலையும் அதிலிருந்து பிரியும் கிளைச்சாலையும் சந்திக்கும் இடம். நேரம் ஏழு மணி. கிளைச்சாலையில் மூன்று கிலோமீட்டரில் நான் வசிக்கும் சிற்றூர். எட்டே முக்காலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் வரும் பேருந்தைப்பிடித்து ஊருக்குச்செல்ல வேண்டும்.
நான் ஒரு அலுவலக ஊழியன். மனைவியும் இரு குழந்தைகளும் வீட்டில். மாதச்சம்பளம் மனைவியின் சிக்கனமான செலவில் அதிக க்கடனில்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடிந்தது. கல்லூரியில் படித்த காலத்தில் இலக்கியம், அரசியல் போன்ற பலவற்றில் ஈடுபட்டாலும் கால ஓட்டத்தில் குடும்பம் என்ற பந்த்தத்தில் என் பாதை தடம் புரண்டு போய்விட்டது. வீடு, அலுவலகம், லௌகீகம் என்று எண்ணங்கள் வேறு பாதைகளில் ஓட ஆரம்பித்து விட்டது.அரசாங்க வேலையானதால் வேலையும் வருமானமும் ஸ்திரமாக இருந்த்தது. சமூக சிந்தனைகள் மனதில் ஏதோ ஒரு மூலையில் அடைந்து விட்டன.
ஒரு நாளின் கடமைகள் முடிந்த்து அக்கடா என்று இருக்கும் பொழுது கடந்தவை பற்றி ஒரு சிறிய வருத்தம் கலந்த நினைவுகள் வரும். இளமையில் இருந்த கனவுகளும் ஆதர்சங்களும் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன. சோறு, வீடு, குடும்பம் சுற்றம் என்ற கவலைகள் கனவுகளைக் கலைத்து விட்டன.
அவ்வப்பொழுது பழைய நண்பர்களை ப்பார்க்கும் பொழுது கொஞ்ச நேரம் இலக்கியம் ஆர்ட் சினிமாஎன்று பேச்சும் அளவாளவல்களும் நீளும். பின்பு அவரவர்களின் குடும்பம் குழந்தை என்று போய்விடும். இன்றும் அப்படித்தான். அலுவலக விஷயமாய் அருகில் உள்ள மாவட்டத்தின் தலை நகரத்திற்கு சென்று விட்டு அப்பொழுதே திரும்பி இருந்திருக்கலாம். பழைய நண்பர்களை ப்பார்த்து பேசிக்கொண்டிருந்ததில் பொழுது கொஞ்சம் அதிகமாகவே கழிந்து விட்டது. திடீரென்று பெய்த  மழையில் அரை மணி நேரம் விரயம். மெயின் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பொழுது பஸ் கிடைக்க இன்னும் நேரமாகி விட்டது. பஸ் கிடைத்த இங்கு வர இன்னும் தாமதமாகி இப்பொழுது இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.
ஸாலையோரம், நிலவில்லா இரவில் இருக்கும் கொஞ்ச வெளிச்சமும் மேகத்தினால் மறைக்கப்பட்டிருந்தது. தனியாக நின்று கொண்டிருப்பது ஒரு இனம் தெரியாத கோபத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தது. பஸ் வர இன்னும் ஒன்றரை மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்தும் கண்கள் சாலையை எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்ட்இருந்தது. மனம் ஏதேதோ எண்ணங்களை அசை போட்டுக்கொண்டிருந்த்தது. நண்பர்களுடண்பந் பேசிக்கொண்டிருந்தது சந்தோஷமாக இருந்தாலும் இப்பொழுது யோசிக்கும் பொழுது கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பி முந்தைய வண்டியைப்பிடித்திருக்கலாமோ என்று மனம் எண்ணியது. யாராவது பக்கத்தில் இருந்தாலாவது பேசிக்கொண்டிருக்கலாம். இந்த வேளையில் இந்த இடத்தில் யாரையும் எதிர் பார்க்க முடியாது
திரும்பி பின்னால் பார்த்தேன். வரிசையாக வீடுகள். பத்து பன்னிரண்டு இருக்கும். முக்கால் வாசி குடிசைகள். ஒரு கட்டிடம் காரை. உணவகம். ஆனால் இப்பொழுது மூடியிருந்த்தது. ஆள் நடமாட்டமே இல்லை.
ஒரு குடிசையில் சிறிது வெளிச்சம் கீரலாக த்தெரிந்தது. ஒரு உருவம் வெளியே வந்து என்னை நோக்கி வந்தது. மங்கலான வெளிச்சத்தில் ஆண் என்று தெரிந்தது. பத்தடி தூரத்தில் வரும் பொழுதே பீடி வாசனை. முகத்தில் இரண்டு நாள் தாடி. தலை நடுவில் வழுக்கை. மீசை திருத்தப்படாமல் வளர்ந்திருந்தது. சட்டை கீழ் இரண்டு பொத்தான்கள் மட்டும் போடப்பட்டிருந்தன. இடுப்பில் கைலி தூக்கிக்கட்டப்பட்டிருந்த்தது.
பீடியை கீழே போட்டு விட்டு அவன் பக்கத்தில் வந்தான். ஸ்நேகமான சிரிப்பு. ஆனால் ஏனோ இணக்கமாக தோன்றவில்லை. பதிலுக்கு சிரிக்காமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவனைப்பார்த்தேன்.  பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதை தெளிவாக அவனுக்கு உணர்த்த விரும்பினேன்.
மறு படியும் புன்சிரிப்புடன் பேச்சை ஆரம்பித்தான். திடீர்னு மழை பெய்ய ஆர்ம்பிச்சிருச்சல்லெ ஸார். ஆமா என்று சுருக்கமாக முடித்து விட்டு பஸ் வரும் பாதையை பார்க்க ஆரம்பித்தேன். ஏனோ இந்த பேச்சு நல்லதற்கல்ல என்று தோன்றியது. அவன் போவதாகத்தெரியவில்லை. மேலும் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான். எந்த பஸ்ஸுக்கு ஸார்? போகும் ஊரைச்சொன்னேன்.ஸார் அந்த பஸ் வராது. ஒம்பதரைக்கு வரும் வேறு ஊர் பஸ் பிடித்துத்தான் போகணும் என்றான். நம்பாமல் இருக்க முடியவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. திரும்பி நகரத்திற்கு போவதென்றால் அனாவசிய அலைச்சல். யார் மேலோ கோபம் வந்தது.
சுற்றி யாரும் இல்லை. வேறு வ்ழியில்லாமல்  பேச ஆரம்பிதோம். வேறு என்ன? அரசியல், சினிமா என்று போய்க்கொண்டிருந்தது. நிச்சயமாக இவனுடன் இலக்கியமோ அறிவியலோ பேச முடியாது. இந்த மாதிரி நேரங்களில் மற்றவர்களை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தால் போதும். பேச்சு நன்றாகவே ஓடும். இப்பொழுது அது நடக்கவில்லை. எனக்கு அதில் நாட்டமில்லை என்பதை வெகு சுலபமாக அவன் கண்டு கோண்டான். வேணுண்ணா வீட்டில் வந்த்து கொஞ்ச நேரம் உக்காந்துட்டெ  போலாம் சார் என்று இயல்பாக ச்சொன்னான், ம்̀ழையும் இரவும் வேறு மார்க்கத்தை காட்டவில்லை. திடீரென்று இங்கு இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக யாரோ சொன்னது ஞாபகம் வந்தது. கால்கள் தயங்கின. சும்மா வந்துட்டு போகலாமில்ல சார். இயல்பாக அவன் சொன்னது நான் வேண்டாமென்றால் அவன் வற்புறுத்தப்போவதில்லை என்று காட்டியது. என்னை மீறி என்ன நடந்து விடுமென்ற தைரியத்தில் அவன் பின்னே நடந்தேன். வெளிச்சமில்லாத இரவில் பாதையில்லாத இடத்தில் அவன் காலடித்தடத்தை தொடர்ந்தேன்.
குடிசை, வெளியே திண்ணை, இரு பக்கமும், மண், சாணி மெழுகியிருந்தது. உட்கார்ந்து உள்ளே பார்த்தேன். காட்சி என்னை பாதித்தது என்றால் மிகையில்லை. அடிவயிற்றில் எட்டி உதைத்ததைப்போல்.
சிறு சிம்னி விளக்கை கையில் ஏந்தி வந்தவளின் முகத்தில் ஒளி கீழே இருந்து அடித்தது. அழகு பார்ப்பவன் பார்வையில் உள்ள விஷயம். அவள் அழகு உறுத்தாத, முகத்தில் அடிக்காத அழகு. ஒரு இளைஞனாக இருந்தால் வீதியில் தாரளமாக கூட்டிச்செல்லாம். மனைவி என்றே நினைப்பார்கள். என் வயதில் அவளை அழைத்துச்சென்றால் மகளென்று நினைப்பர்.
ஐநூறு ரூபா சார். ராப்பூரா தங்கிட்டு காலையிலெ போகலாம் என்ற அவன் பேச்சு என்னை நிதர்ஸந்த்திற்கு கொண்டு வந்தது .
அவளை மறுபடி பார்க்க வேண்டுமென்று தோன்றியது.  விபசாரி என்ற உருவகத்திற்கும் நான் பார்ப்பதற்கும் சம்பந்தமேயில்லை. சாயம் பூசிய உதடு, மாவு அப்பிய முகம், சாயம் போன சேலை, கண்களீலும் முகத்திலும் காமம் என்ற என் மனச்சித்திரத்திற்கு ஒரு விதத்திலும் ஒத்து வராத அந்த உருவத்தை மறு படியும் பார்க்க விரும்பினேன். என்னை ப்பொருத்த வரையில் விபசாரியிடம் போவது என் ஆண்மைக்கு ஒவ்வாத செயல். என் விருப்பம் போலவே விரும்பும் ஒரு பெண்ணுடன் முயங்குவதற்கு யாரும் யாரிடமும் கூலி வாங்குவது எனக்கு சரியாகப்ப்டவில்லை. இது என் கோட்பாடு. அதன்படி நான் நடக்கிறேன். இது வரை அப்படியே.
ஆனால் இந்தப்பெண். குழந்தைத்தனமான இந்த முகம். நிர்மலமான இந்த இவள். ஒரு தகப்பனான நான். இவளை வீட்டிற்கு அழைத்துச்சென்று பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அனுப்பி நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுப்பது வரை ஒரு நிமிடக்கற்பனையில் வாழ்ந்து விட்டேன்.
திடீரென்று காரணமில்லாத, இலக்கிலாத கோபம் வந்தது. இது வரை விபச்சாரத்தை ப்பற்றி   தீவிரமான சிந்தனை ஒன்றும் இருந்ததில்லை. யாரையோ பற்றிய விஷயம் என்றெ நினைத்திருந்தேன். நான் என் வாழ்வில் அதை சந்திப்பேன் என்று நினைத்ததில்லை. ஆகையால் அதை எப்படி எதிர் கொள்வதென்று தெரியவில்லை. அங்கிருந்து சென்று விடுவது எளிது. ஆனால் அவள் முகம். கதவின்  மறைப்பில் ஒரு எதிர்பார்ப்புடன் என்னை ப்பார்க்கும் அந்த பார்வை. என்னை யோசிக்கவைத்தது. இதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரியவில்லை.
பாலில்லாத பொடிக்காப்பி அவள் கொண்டு கொடுத்த பொழுது அந்த சூழ்நிலை ஒரு சர்ரியலிஸ்டிக்  அபத்தம் இருப்பதாகப்ப்ட்டது. வழக்கமாக இந்த சூழ்நிலையில் கேட்கும் கேள்வி நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தாய் என்பது. அது என் முன்னிருக்கும் பிரச்சனைக்கு ஒரு வழியும் காட்டப்போவது இல்லை.
இதை எப்படி எதிர் கொள்வது?
காப்பியை ஒரு நேரம் கடத்தும் உபாயமாக மெதுவாகக்குடிக்க ஆரம்பித்தேன். எனக்கு அங்கிருந்த மௌனம் கனமாகத்தெரிந்தது. அவர்கள் இருவரின் முகங்களும் அரை இருட்டில் என் மனோ பாவத்திற்கு ஏற்றாற் போல் கற்பனை செய்து கொள்ள ஏதுவாக இருந்தது.
காப்பி குடித்து முடிப்பதற்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். காப்பியை கீழே வைத்துவிட்டு பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். வழக்கமாக நான் எவ்வளவு பணம் எடுத்து செல்வது என்று அவள்தான் முடிவு செய்வது. முக்கால் வாசி நேரங்களில் சரியாகத்தான் இருக்கும். ஆகையால் என்னிடம் எவ்வளவு பணம் இருக்குமென்பது எண்ணி ப்பார்த்தால்தான் தெரியும்.
முன்னூற்றுச்சில்லறை. சிரிப்பு வந்தது. அனாவசிய செலவாளி என்று என்னைப்பற்றி அவளுக்கு எண்ணம். ஆகவே எண்ணி கொடுத்தனுப்புவாள். ஆனால் அத்யாவசிய செலவுக்கென்று ஒரு ஐனூறு ரூபாய் நோட்டு உள் மடிப்பில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். அதை எடுத்து செலவளித்தால் மனைவியிடம் தகுந்த காரணம் சொல்ல வேண்டும்.
இது நிச்சயமாக அத்யாவசியமான செலவு, என்னைப்பொருத்தவரையில். அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன். எனக்கு இந்தப்பெண்ணுடன் படுப்பதற்காக இந்தப்பணத்தை கொடுக்கலை. இன்னைக்கு இவளை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். வீட்டில் இந்தப்பெண் சும்மா இருக்கட்டும். நான் பஸ் பிடித்து கிளம்புகிறேன் என்று புறப்பட்டேன்.
அவள் அப்பொழுதுதான் முதலாகப்பேசினாள். எங்களுக்கு பிச்சை வேண்டாங்க. குரலில் உறுதியும், கோபமும் சரிபங்காக இருந்தது.
இதை பிச்சையாகவோ சும்மாகவோ கொடுக்கவில்லை, இன்றிரவுக்கு நான் பணம் கொடுத்திருக்கேன்மா. அதை எப்படி செய்றதுங்றது நான் முடிவு செய்யணும்.
 இது போல் ஒரு கிறுக்கனை அவர்கள் பார்த்திராததாலோ என்னவோ அவர்களுக்கு அதை எப்படி எதிகொள்வதென்று தெரியவில்லை. ஒரு வேளை சாப்பிட்டுட்டு போங்களேன் என்றாள் அவள். அதில் ஒன்றும் எனக்கு எதிர்கருத்து இல்லாததால், என் வண்டி வருவதற்கு இன்னும் நேரமிருப்பதால் சாப்பாடு தயாராவதற்காக காத்திருந்தேன். பேச்சு இலக்கில்லாமல் போய்க்கொண்டிருந்தது.
அவளால் பணம் பெற்றதற்கு சமாதானப்படமுடியவில்லை. அவர்களுக்குள் விட்டுவிட்டு அந்த பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. நான் என் நிலையை விளக்கவேண்டிவந்தது.
அம்மா, எனக்கு உன்னுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் காசுக்காக இந்த தொழில் எனக்குச்சரியாகவும் படவில்லை. உலகத்தில் இதை என் தனி ஒருவனால் ஒழிக்கவும் முடியாது. அதற்காக ஒன்றும் செய்யாமலும் இருப்பதற்கும் முடியவில்லை. இதை இன்று செய்வதால் ஒரு பெண்ணை ஒரு நாள் இதிலிருந்து காப்பாற்ற நினைக்கிறேன். நான் இப்பணத்தை எவ்வளவு நியாயமாகக்கொடுக்கிறேனோ, அதைப்போலவே நான் போன பிறகும் இன்று வேறு யாரையும் கூப்பிடாமல் இருப்பதே உன் பங்குக்கான நியாயம் என்று நினைக்கிறேன்.
இந்த சொற்களுக்குப்பிறகு அங்கு கனத்த மௌனமே நிலவியது.
சாப்பாடு நன்றாகவே இருந்தது.
பஸ் பிடித்து ஊர் வந்து சேரும் பொழுது மணி பத்தரை. வீடு சேரும் பொழுது மனைவி கலந்த தலை, தூக்கம் நிரம்பிய கண்களுடன் வந்து கதவைத்திறந்தாள். வ்ழக்கம் போல ஏங்க இவ்வளவு நேரம்? நான் எத்தனை மணிக்கு வந்தாலும் இந்தகேள்விதான் வரும். தேவடியா வீட்டுக்கு போயிட்டு வந்தேன். சிறிது கூட ஆச்சரியமோ கோபமோ படாமல் என்னத்துக்கு? என்று அவள் கேட்டபொழுது அவளை கட்டியபடியே எதுக்கு போவாங்க? என்றேன்.
மத்தவங்க அதுக்கு போவாங்க? நீங்க அதுக்கு போகமாட்டீங்க, அதான் கேக்குறேன். எதுக்கு போனீங்க?
ஒரு நிமிடம் திக்கென்று கண்களில் நீர் முட்டியது. இத்தனை நம்பிக்கையை நான் எப்படி நான் காப்பாற்றப்போகிறேன்.
நடந்ததை சொன்னேன்.
விடுங்க எல்லாரும் காசு குடுத்து உடம்பை வாடகைக்கு பிடிப்பாங்க, நீங்க அவ் மனசில் இடம் பிடிச்சிருக்கீங்க, வந்து படுங்க.
படுக்கையில் விழுந்த பொழுது அவ்வளவுதானா? அவள் மனசில் கொஞ்சம் இடம்தானா என்று தோன்றியது.