zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்

Sunday, 22 May 2011

கலைந்த சில கனவுகள்

என் கிராமம் நாலு தெரு, அதன் உள் பிரிவுகளாக சந்துகள். மின்சாரம் மட்டும் வந்து மக்கள் அதை வைத்து உற்பத்தி செய்த காலம். சினிமா ஒன்றுதான், பொழுதுபோக்கிற்கு. இரண்டு காட்சி ஏழே காலுக்கும், பத்தே முக்காலுக்கும். இரண்டாவது ஆட்டம் காத்தாடும். கொட்டகை பக்கத்திலுள்ள டவுனில். முதலாளி காரைக்குடி செட்டியார்.செபஸ்தியான் மானேஜர். முதலாளியை விட பந்தா,கெத்து, குயுக்தி எல்லாம்.முதல் ஆட்டதிலேயே இரண்டாவது ஆட்டத்திற்கும் சேர்த்து காசு பார்த்துவிடுவார். என் பத்து வயதில் சினிமா பார்க்க அம்மாவுடன் செல்வது இழுக்காகத்தெரிந்தது. இல்லா விட்டால் பண்ணையாள் சுடலைமுத்துவுடன் போகவேண்டும் அது சடை. அப்பொழுதுதான் ராமநாத மாமா ஊருக்கு வந்தார்.
சொந்த மாமா அல்ல. ராணுவத்தில் ஆபிஸர் பயிற்சியில் பாதியில் ஓடிவந்தவர். சொந்த ஊர் கொஞ்சம் கிழக்கே. தூரத்து அண்ணன் உறவில் எங்கள் ஊர்காரர் ஒருவர் இருந்ததால் இங்கு பிரச்னைகள் தீரும் வரை இருக்கலாமென்ற உத்தேசம். அவர்கள் சாதிக்காரர்கள் உயரமாக, ஒல்லியாக மாநிறத்திலிருந்து தாமிர நிறம் வரை இருப்பார்கள்.
ராமநாத மாமா எல்லோரையும் விட வளர்த்தி. சுருள் முடியை குட்டையாக வெட்டி நறுக்கு மீசை வைத்திருப்பார். ஒருநாள் இரண்டுநாள் தாடியிருக்கும் முகத்தில், பாண்ட்ஸ் பௌடரும், கத்திரி சிகரெட்டும் கலந்த வாடை. புகைப்பது இப்பொழுது போல் குற்றமாக கருதப்படாத காலம்.அவரிடம் இந்த வாசனையை முகர்ந்து கொண்டே அவருடன் கூட நடக்க பிடிக்கும். நல்ல வாயல் வேட்டி. இரட்டை மடிப்பு. நுனியை கையில் பிடித்து கொண்டு கொண்டு வேகமாக நடப்பார், ஆனால் நான் கூட நடக்கும் போது வேகத்தை குறைத்துக்கொள்வார். ஊர் விஷயங்களை என் வயது பாராமல் பகிர்ந்து கொள்வார். பத்து வயது சிறுவனுக்கு ராமனாத மாமாவை ப்போன்றவர்கள் ஆதர்ஸங்களாகத்தெரிவார்கள். உலக விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே வருவார்.
ராணுவத்தில் டாங்கை எப்படி ஓட்டுவது என்பன போன்ற விஷயங்கள்(டாங்கின் சக்கரங்கள் ஒரு சங்கிலியில் கோர்க்கப்பட்டு தனித்தனியாக உருளும்).ஊருக்கு மேற்கே மலைத்தொடர். அடிவாரம் ஏறினால் மலைக்காடுகள். வனத்தின் ஓரம் வரை சென்று வருவோம். அக்காலத்தில் யானைகள் ஊர் தோட்டங்களுக்குநீர் தேடி வந்துவிடும். கொஞ்சம் பயமாக இருப்பினும் அது ஒரு சுவாரஸ்யம்.
பொன்னழககா காட்டு வேலைக்கு போகும். பொன்னழகு என் வீட்டில் வேலைசெய்பவர்.  அக்காலத்தில் வருடம் முழுவதும் வேலை செய்துவிட்டு கடைசியில் மொத்தமாக சம்பளம் வாங்கிக்கொள்ளும். பொட்டு தங்கம் அல்லது பாத்திர பண்டம் வாங்கி கொள்ளூம். எப்போதொ நடக்கப்போகும் கல்யாணத்திற்கு.  நான் பிறந்ததில் இருந்து வீட்டில் இருப்பதால் வீட்டில் ஒன்றாகவே நினைத்தேன். அக்கா நன்றாகவே இருப்பாள் என்று அம்மா சொல்லுவாள். லட்சணமாக இருக்கடி. கல்யாணம் கட்டி நல்லா இருக்கப்போறடி என்பாள் அம்மா.
ஒன்றும் இல்லாவிட்டாலும் அழகு அக்காவிடம் நிறைய இருந்தது. செய்யும் வேலையும் அது போலவே. ஒரு நேர்த்தியும், நளினமும் இருக்கும். அம்மா அவளுக்கு பழைய சேலையும் துணியும் தருவாள். எங்கள் வீட்டு சமையல் அவளுக்கு அத்துபடி. ராமநாத மாமா எங்கள் வீட்டுக்கு வருவது எனக்காக என்று நான் அப்பொழுது தவறாக நினைத்திருந்தேன். அம்மா அவரை நாசுக்காக வரவேண்டாமென்று சொன்ன பொழுது கூட நான் அவருடன் பழகுவது பிடிக்கவில்லை என்றுதான் நினைத்தேன்.
பின்னொரு நாள் ராமநாத மாமாவையும் பொன்னழகு அக்காவையும் வேறு ஒரு சூழ்நிலையில் பார்க்கும் வரை.
விவசாய குடும்பத்தில் பிறந்ததால் வயல், மற்றும் காட்டுவேலைக்கு அம்மாவுடனும், பண்ணையாட்களுடனும் போக வேண்டும். பள்ளியில்லாத நாட்மளிலும் விடுமுறையிலும். ஊரைவிட்டு வெகு தூரத்தில் உள்ள காட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலைகள் ஒரு ரசமாக இருக்கும். இரவு வேளைகளில் தங்க வேண்டியதும் வரும். அது போல ஒரு நாள், இரவில் காட்டிலிருந்து வர வேண்டிய தாயிற்று. வரும் வழியில் ராமநாத மாமவும் பொன்னழகு அக்காவும் ஒன்றாகச்செல்வதை பார்த்தேன்.
சிறு வயதின் ஆர்வத்துடன் பின்னேயே சென்றேன்.
காமம் எனக்கு அப்பொழுது இதிகாச காதலாகத்தெரிந்தது. என் கற்பனையில் அவ்விருவரும் ஆதர்ச காதலராகத்தெரிந்தனர். அவர்களை பல இடங்களில் பின் தொடர்ந்தேன். ராமனுக்கு அனுமன் போல என்னை நினைத்துக்கொண்டேன். 
கருப்பு வெள்ளைப்படங்களில் வரும் கதாநாயகன், நாயகி போல் அவர்கள் என் கண்களில். யாருக்கும் தெரியாமல் அவர்கள் சந்திப்பது எனக்கு மட்டும் தெரிந்தது.
கவனமாக அவர்கள் இருந்தாலும், என் அம்மாவின் கண்களுக்குத்தப்பவில்லை. ஒரு நாள் பொன்னழகை தனியாக இழுத்துச்சென்று ஏதோ விசாரிப்பதை தெரிந்து கொண்டு மாமாவைத்தேடிச்சென்றேன். விஷயத்தை சொன்னவுடன் அவர் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளாதது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என் கற்பனையில் அவர்கள் இருவரும் கிராமத்து வீதிகளில் மணம் செய்து கொண்டு வருவதைப்போலவும், யார் எதிர்த்தாலும் வாழ்ந்து காட்டுவது போலவும். அல்லது இருவரும் ஓடிப்போய் எங்கோ வாழ்வதைப்போலவும். பல வருடங்கள் கழித்து, ஏதோ ஒரு நகரத்தின் வீதியில், அவரை ஒரு அலுவலாரகவும், அக்காவை இரு குழந்தைகளுடனும் பார்ப்பது போலவும் எல்லாம் கனவு கண்டிருந்தேன்.
எனக்குத்தெரிந்தாலும் வெளியே என்னால் சொல்லமுடியவில்லை. ஒரு பார்வையாளனாககூட நான் இல்லை. என் வயது, மற்றும் வீட்டு நிலைமையினால் நான் இந்த நாடகத்தில் ஒரு அங்கம் கூட வகிக்கவில்லை. மனம் பொறுக்க முடியாமல் அம்மாவிடம் ஓடி அவர்களுக்காக வாதாடினேன். அது வரை அம்மாவுக்கு எனக்கு இந்த விஷயம் தெரியும் என்று தெரியாது.
ஏனோ என்னைத்தவிர மற்றவர்களெல்லாம் இதை வேறு மாதிரி பார்ப்பதாகத்தோன்றியது.
சினிமா பார்த்து ரொம்ப கெட்டுபோயிட்டடா, ஒழுங்கா பாடத்தை படிக்கிறத விட்டுட்டு இது மாதிரி செஞ்சுக்கிட்டிர்ந்தா, அப்பா கிட்ட சொல்லி ஹாஸ்டல போட்டிருவேன். இதைப்பத்தி வெள்யே யார்கிட்டயாவது சொன்னே. கொன்னுறுவேன்.
அம்மாவின் பெரிய ஆயுதம் ஹாஸ்டலில் சேர்த்து விடுவேன் என்பதுதான். நான் பள்ளிக்கு செல்லும் வயது வந்தவுடன் ஆரம்பித்த இந்த பேச்சு இது வரை முடியவில்லை. அப்பா என்னை வெளியூரில் படிக்க வைக்கவேண்டுமென்கிறார், அம்மாவுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. எனக்கு அதை ஏதோ பெரிய தண்டனை போல உருவகப்படித்தி வைத்திருக்கிறாள். நான் வீட்டில் ஒரெ பிள்ளையாதலால் பாட்டி இருக்கும் வரை வெளியூர் போய் படிப்பதற்கே இடமில்லை. ஆயினும் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து முடிவு செய்தால் என்ன ஆகும் என்று தெரியாததால் ஒரு சிறு பயம். அம்மா இந்த ஆயுதத்தை எடுத்தால் நான் படிந்து விடுவது வழக்கம். ஆயினும் காதலருக்கு உதவி செய்ய வேண்டுமென்று தோன்றியதால் பொன்னழகு அக்காவிடம் சென்று என் யோசனைகளை சொன்னேன். அம்மாவுக்கு தெரிந்ததும் என்னை கட்டு குண்டாகக்கட்டி அவள் அண்ணன் வீட்டில்  கொண்டு விட்டு விட்டாள். அங்கே என் வயதில் பல உறவு மற்றும் நண்பர்கள்.  மாமாவுக்கு என் வயதிலும் ஒரு வயது குறைவாகவும் இரண்டு பையன்கள். அதற்கடுத்து இரண்டு பெண்கள். எங்கள் வயதால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக திரிந்தோம்.
அவர்களை எல்லாம் என் காதலருக்கு உதவும் திட்டத்தில் சேர்த்து விட்டேன். என் வயதொத்த என் நண்பர்கள் நடுவே எனக்கு கதாநாயக அந்தஸ்து. அவர்களுக்கு உதவும் திட்டத்தில் ஏராளமான யோசனைகள் திட்டங்கள். எல்லாம் என் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டன. என்னால் நிராகரிக்கப்பட்டன. பத்து பதினோரு வயதில் உள்ள சிறுவர்கள் சிந்திக்கும் திட்டங்கள் நிதர்ஸனத்திற்கு கொஞ்சமும் அருகில் வரவில்லை. கனவிலும், கற்பனையிலும் நாங்கள் அவர்களுக்கு நூறு வகை வாழ்க்கையும் ஆயிரம் வகை மணமும் செய்து வைத்து விட்டோம். நனவில் நான் இங்கே அவர்கள் என் கிராமத்தில்.
நாட்கள் ஓட ஓட மற்றவர்களுக்கெல்லாம் சுவாரஸ்யம் குறைந்தது. நானும் இவற்றை தள்ளி வைத்து விட்டு என்வயதுக்கொத்த விஷயங்களில் நுழைந்தேன். ஒரு மாதம் கழித்து அம்மா வந்து வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனாள். பள்ளி அதை விட்டால் வீடு. வேறு எதற்கும் நேரம் கிடைக்கவில்லை. ஒரு மாதப்பாடங்களை நான் முடிக்க வேண்டியிருந்த்தால் வேறு எதற்கும் நேரம் கிடைக்கவில்லை. என் ஆதர்ச காதலர்களை நான் தற்காலிகமாக மறக்க வேண்டியதாயிருந்த்து. யாரிடமும் கேட்க முடியாது. சுடலமுத்து ஒருவந்தான் ஏதாவது சொல்ல க்கூடும். ஆனால் அவனுக்கு ஒன்றும் தெரியாதது மற்றுமல்ல, மடையனும் கூட.
வாரங்கள் கழித்துதான் நேரம் கிடைத்து பொன்னழகக்கா வீட்டுக்கு ஓடினேன். அக்கா அங்கு இல்லை.  கல்யாணமாகி சென்றுவிட்டதாக சொன்னார்கள். மாப்பிள்ளை பக்கத்து ஊர். அவர்களுக்கு சொந்தக்காரன். ராமநாத மாமாவையும் காணவில்லை. அவரைப்பற்றி கேட்கலாம். அதனால் அவர்கள் வீட்டில் கேட்டேன். அவர் ஊருக்கு போயிருப்பதாகச்சொன்னார்கள். என்ன நடந்தத்தென்று அறிய மனது துடித்தாலும், அதை அறிய வழியில்லாததால் அதை மறக்க முயன்றேன். வருடம் கடந்தது. அவ்வருடம் மாமா பிள்ளைகள் எல்லோரும் எங்கள் ஊருக்கு விடுமுறைக்கு வந்திருந்தனர். மறுபடியும் கதாநாயக அந்தஸ்து. காதலர்கள் சந்தித்த இடங்கள் எல்லாவற்றையும் காட்டவும். அவர்கள் அமர்க்காதலை விவரிக்கவும் நேரம் போதவில்லை. சாப்பிட மட்டும் வீட்டுக்கு. மற்ற நேரங்கள் முழுவதும். காட்டிலும் மேட்டிலும். சிறுவர் விளையாட்டில் நாட்கள் போனதே தெரியவில்லை.
திடீரென்று ஒரு நாள் கதாநாயகனும், கதாநாயகியும் திரும்ப வந்தனர். தத்தம் கணவன், மனைவியுடன். சினிமாவில் இது போல் எத்தனை காட்சிகள் பார்த்திருக்கிறோம் நாங்கள். காதலர்கள் இருவரும் சந்தித்து மனமுருகும் உணர்ச்சிபூர்வமான காட்சியை தவற விடக்கூடாது என்று நாங்கள் அவர்கள் பின்னாலேயே அலைந்தோம். நாங்கள் விளையாடும் சராசரி விளையாட்டுக்களை விட இது சுவாரஸ்யமாக இருந்தது. நாட்கள் நகர நகர எங்கள் ஆவல் தாங்கமுடியாத அளவு ஆயிற்று. ராமநாத மாமா ஊருக்கு போய் விட்டதால் எங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
வந்தவர்கள் எல்லாம் ஊருக்கு போய்விட இந்த காதல் கதையை நான் மறந்தே விட்டேன். என்றோ பார்த்த ஒரு படத்தின் கதை போல.
எல்லா கதைக்கும் ஒரு சுபம் என்ற முடிவு வருமல்லவா.
அன்றுதான் என் கனவு கலைந்தது. பொன்னழகு அக்கா வீட்டுக்கு வந்திருந்தாள். அம்மா காப்பி போடுக்கொண்டே என்னாடி எப்டி இருக்கே, சங்கையன் நல்லா வைச்சுருக்கானா என்று கேட்டாள். நான் அங்கிருப்பது அவர்களுக்கு தெரியாது.
அக்கா படீரென்று அம்மா காலில் விழுந்தாள். நல்ல வேளை என்ன கடவுள் மாதிரி காப்பாத்தினீங்கம்மா. உங்களை நம்பலை முதல்ல, அப்பறம் நீங்க சொன்ன மாதிரியே எல்லார் முன்னாலியும் என்ன கட்டிக்கிறேன்னு சொல்லுன்னவுடனே அவெ ஓடிட்டாம்மா. எம்புருஷன் தங்கம்மா பார்த்திகிறாரு. சந்தோஷமா இருக்கேன். அய்யாவும், நீங்களுந்தே என்னை சீப்படாம காப்பத்தினீங்க.
அவர்கள் மேலே ஏதேதோ பேச நான் நகர்ந்து விட்டேன்.  கதை, கனவுகள் கலைந்து,இவற்றிலிருந்து நகர்ந்து நிஜ வாழ்க்கைக்கு வந்தது வலித்தது.

Thursday, 19 May 2011

ஒரு சாலையோரத்து டீக்கடை


அந்த சாலை ஊரிலிருந்து மலைஅடிவா ரத்தில் இரண்டு சாலையாக பிரிந்தது. ஒன்று மலை தாண்டி கேரளா சென்றது. மற்றொன்று சில கல் தொலைவில் காபித்தோட்டங்களூடே முடிந்தது. சாலை பிரியும் இடத்தில் சில கடைகளில் ஒன்று சுப்பையாவுடையது. அவர் சில வருடங்களுக்கு முன் திடீரென்று அங்கு வந்து கடை போட்டார்.கூட மனைவி. இருவரும் கெச்சலான உடம்பு. ஆனால் கடும் உழைப்பாளிகள். சில நாட்களிலேயே வியாபாரம் சூடு பிடித்தது.
சுப்பையா ஒடிசல் உடம்பு. எப்பொழுதும் மேலெ துணியில் தைத்த பனியன் போல ஒரு பனியன், கீழெ ஒரு பட்டா பட்டி துணியில் ஒரு வேட்டி. சிரிக்க மறந்த முகம். முகத்தில் பல் துலக்கும் ப்ரஷ் போல மீசை. பற்கள் இடைவெளி விட்டு கறையுடன். வாயில் எப்பொழுதும் இருக்கும் புகையிலையினால். காலையில் உணவு உண்டு விட்டு பின் புகையிலை போட்டால் எப்பொழுது வாய் கொப்பளித்து உண்பது என்று தெரியாது. வேலை இயந்திரகதியில். உணர்ச்சிகள் என்பதே முகத்தில் தெரியாது. வந்து ஏழெட்டு வருடங்கள் ஆனாலும் யாருடனும் அதிகமான பழக்கம் வைத்துக்கொள்வதில்லை. காலையில் இருந்து வரவாகும் பணம் இரவில் பூட்டிய பெட்டியில் பக்கத்திலுள்ள காவல் செக்போஸ்டில் பத்திரமாக இருக்கும். அடுத்த நாள் எட்டரை மணி வண்டியில் வங்கிக்கு போய்விடும். பட்டுவாடா செய்ய வேண்டிய பணம் கணக்கு வைத்துள்ள கடைகளுக்கு நேரே கொடுக்க பட்டுவிடும். எங்கும் யாரிடமும் கடனும் இருக்காது, கடன் கொடுப்பதும் கிடையாது. காவலருக்குக்கூட கடனோ இலவசமோ கிடையாது.
மனைவி பின்பக்கம் இருந்த தடுப்பிலிருந்து வெளியே வருவது அபூர்வம். கைமணம் செய்யும் உணவில் தெரியும். அளவான ஓட்டத்துடன் சுப்பையா நிறுத்திக்கொள்வார். என்ன கூட்டம் வந்தாலும் மறு அடுப்பு ஏற்றுவது கிடையாது. பல நாட்கள் தாமதமாக வருபவர்கள் ஏதும் கிடைக்காமல் போகவெண்டியதுதான்.
காலை அய்ந்து மணிக்கெல்லாம் கறந்த பால் உலையில் காய ஆரம்பிக்கும். சுப்பையாவின் தேத்தண்ணீர் ஒரு மணமாகவும். சுவையாகவும் இருக்கும். பேருந்திலும் சிற்றுந்திலும் மலை வேலைக்கும், சுற்றுலாவுக்கும் செல்லும் மக்கள் அவர் கடையில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கினர்.
சுப்பையா அதிகாலை நான்கு நான்கரைக்கெல்லாம் எழுந்து பல் துலக்கியபடி வெளியே போய்விட்டு வரும் நேரத்தில் அவர் மனைவி குளித்து அடுப்பு பற்ற வைத்து இட்லி கடையை ஆரம்பித்து விடுவாள்.
காலையில் முதல் வண்டியில் வரும் கூட்டம் இட்லி வடையுடன் டீ, காபி சாப்பிடும்.
ஒன்பதரைக்கெல்லாம் டிபன் முடிந்து வடை தொடங்கும். டீயும் காப்பியும் ஒரு ஆறு, ஏழு லிட்டர் பால் தீரும் வரை ஓடும்.
வாடிக்கையாளர் சிலருக்கு மட்டும் மதிய சாப்பாடு, மற்றவர்களுக்கு மீந்து போன வடைதான் கிடைக்கும்.சுப்பையா மதியம் கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பார். பின்பு மலை இறங்குபவர்கள் மற்றும் வேலைமுடிந்து திரும்புவர்களுக்கும் பலகாரம் டீ காபி கிடைக்கும். மாலை மயங்க கடை ஏறக்கட்டப்படும்.
சுப்பையா முன்பு கொஞ்சம் தூரத்திலுள்ள சிறு நகரத்தில் பெரிய வணிகர். சிறு வயதில் ஒரு பெரிய கடையில் வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சொந்த வியாபாரம் ஆரம்பித்து நன்றாகவே வளர்ந்தார். திடீரென்று ஒரு நாள் நஷ்டம் வந்த பொழுது எல்லாவற்றையும் பிரித்து கொடுத்து விட்டு வந்து விட்டார். நஷ்டத்திற்கு காரணம் அவரது மாமனார். சுப்பையாவின் முன்னாள் முதலாள. அவரது உழைப்பையும், வியாபார நேர்த்தியையும் பார்த்து விட்டு அவருக்கு பெண் கொடுத்தவர். மாமனார் எண்ணம் அப்படியே கூட வைத்துக்கொள்வதுதான். ஆனால் கல்யாணம் முடிந்தவுடனே சுப்பையா வெளியே வந்து கடை போட்டு நன்றாகவே வளர்ந்தார். மாமனாருக்கு உள்ளெ வருத்தம் இருந்தாலும் மருமகனுடன் நல்ல உறவும் மரியாதையுமே இருந்தது. மாமனார் ஒரு  வியாபரத்தில் கூட்டு சேரச்சொன்னார். சுப்பையாவுக்கு பிரியமில்லை. மாமனாருக்கு வருத்தம்.  அந்த வியாபாரம் கடும் நஷ்டம். மாமனார் எல்லாவற்றையும் இழக்க வே̀ண்டிய நிலைமை.   சுப்பையா அவர் சொத்தை விற்று எல்லாவற்றையும் கடனை அடைத்தார். கட்டிய வேட்டியுடன் மாமனார் முன்பு வந்து இருந்த வீட்டின் பத்திரத்தை கொடுத்துவிட்டு கிளம்பினார். அவர் நினைத்தது அவர் மனைவியையும் விட்டு விட்டு போவது என்று. அவர் மனைவி அவருடனே நடந்தாள்.
̀அங்கு புறப்பட்டவர் வந்து இறங்கியது அந்த ரோட்டோரத்தில். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு சென்று பிள்ளைகளை பார்த்து விட்டு வருவார்கள்.
வாழ்க்கை வேறு பாதையில் போனாலும் தடம் புரளவில்லை.
நாட்கள்.வாரங்கள் மாதங்கள் வருடங்களாயின. வந்த பணம் மாமனாரின் மிஞ்சிய கடனை அடைக்கவும் , அவருக்கு உதவுமே செலவளிந்தது. சுப்பையா யாருடனும் ஒட்டுவதில்லை. பேச்சு சிரிப்பு எல்லாம் அன்னியமாயின.
காலம் அதன் போக்கில் போனது. வாழ்க்கை அதனுடன். சுப்பையா தேனீரிலும், அவர் மனைவி அடுப்புடனும் வாழ்க்கையை ஓட்டினர். அவர்கள் குழந்தைகளை மனைவியின் தம்பியிடம் விட்டிருந்தனர். அவர்களைக்கூட அபூர்வமாகத்தான் சென்று பார்த்தனர். கடை, கடை மட்டுமே வாழ்க்கை ஆகி விட்டது. சக்கரம், செக்கு போல அவர்கள் வாழ்க்கையும் ஒரு வட்டத்திற்குள்.
அன்றும் அவர்கள் காலை வழக்கம் போலவே விடிய ஆரம்பித்தது.
சுப்பையா அன்று வழக்கம் போலவே வாயில் பல்குச்சியுடன் சாலை ஓரமாக வெளியில் போக நடந்தார். பொழுது இன்னும் புலராமல் இருட்டு இன்னும் மிஞ்சியிருந்தது. சிறிது தூரத்தில் மரத்தில் மோதி ஒரு வண்டி. ஓடிப்போய் உள்ளே பார்த்தபொழுது முன்னிருக்கையில் வண்டியோட்டியும் ஒரு பெரியவரும். பின்னிருக்கையில் ஒரு நடுத்தர வயதுப்பெண். பெரியவரின் மனைவியாக இருக்க வேண்டும். அடி பட்ட காயங்களுடன், மயக்கமாக. அப்பெண் கழுத்து, கை முழுவதும் நகைகள்.
சுப்பையா சிறிது தயங்கி பின் நகைகளையெல்லாம் கழட்டி பக்கத்தில் இருந்த மரத்தின் மேலே மறைத்து வைத்தார்.
கீழே இறங்கி வந்து வேகமாக ஓடி செக்போஸ்டில் உள்ள காவலரிடம் சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு ஓடி வந்தார். அதன் முன் ஆம்புலன்ஸுக்கு தொலபேசியில் அழைத்துவிட்டு.
அடிபட்டவர்களை வண்டியில் இருந்து வெளியே எடுக்கும் பொழுதே வண்டி வர, எல்லோரையும் போட்டு அவர்களுடன் மருத்துவ மனைக்கு ஓடினார் சுப்பையா.
அன்று கடையை அவர் மனைவி பார்த்து க்கொண்டாள். அவர் அடிபட்டவர்களின் சொந்தங்களை கண்டு பிடித்து தகவல் கொடுக்க அவர்கள் வந்த பிறகு கடைக்கு திரும்பினார்.மீண்டும் வாழ்க்கை பழைய நிலையில். தேனீர் அடுப்பு, வடை செட்டி, கல்லாபெட்டி, கடைக்குள் படுக்கை. நாட்கள் வாரங்களாகி மாதமும் ஆயின.
ஒரு நாள் சுப்பையா கடைக்கு முன், நான்கைந்து வண்டிகளில் ஆட்கள் வந்து இறங்கினர். வழக்கமான ஆட்களல்ல. அவர்களின் வசதியும், தரமும் உடுத்தியிருந்த உடைகளிலும், அணிந்திருந்த நகைகளிலும் தெரிந்தது. அவர்களில் அடிபட்ட பெரியவரும், அந்த அம்மாவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் பணம், துணி மற்றும் நகைகள்.
அடிபட்டு சுப்பையாவால் காப்பாற்றப்பட்டவரும் அவர் மனைவியும் செல்வசெழிப்புள்ள குடும்பத்தின் மூத்தவர்கள். பெரியவர் உண்டாக்கி காப்பாற்றி வரும் தொழிலும், பணமும் அவரை அவர் குடும்பத்திலும், ஊரிலும் அவருக்கு ஒரு மதிப்பையும் மரியாதையையும் கொடுத்தது.
அவர்கள்  சுப்பையாவின் கடையில், அந்நியமாகவும், வித்தியாசமாகவும் தெரிந்தனர். பெரியவருக்கு சுப்பையாவைப்பற்றி முன் தெரியாவிட்டாலும் இப்பொழுது விசாரித்து தெரிந்தே வந்திருந்தார். அவர் பரிமாற்றம் சுப்பையாவின் முன்னாள் நிலையை மனதில் வைத்து. 
சுப்பையாவின் சுகம், மற்றும், நடத்தும் தொழிலில் உள்ள நிலவரங்களை க்குறித்து சம்பிரதாயமான விசாரிப்புகள். அவர்களிடையே பேச வேண்டிய விஷயதிற்கு வருவதற்கு ஏதோ தயக்கம். அது அவர்களை தயங்க வைத்தது.
பெரியவர் தயங்கி தயங்கி விஷயத்திற்கு கடைசியில் வந்தார். அவர் கண்ணைக்காட்ட கூட வந்தவர்கள் ஒரு பெரிய தாம்பாளத்தை எடுத்து வைத்து அதில் பழம், தேங்காயுடன் புது வேட்டி, சட்டை, பட்டு புடவை, துணித்துண்டு, அவற்றுடன் பணக்கட்டு.
எடுத்து முன்வைத்து " தயவு செஞ்சு ஏத்துக்கணும், எங்க உயிரையும் உடமையையும் காப்பத்தினதுக்கு.”
சுப்பையா அவரைப்பார்த்த பார்வையில், எல்லோர் முகமும் மாறியது.எடுத்து வைத்த பொருட்கள் மறுபடியும் பைக்குள் போயின. அப்ப வரங்க என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டனர்.
டீக்கு பதினேழு ரூபா நாப்பது பைசா என்று ஒரு உணர்வும் இல்லாத குரலில் சுப்பையா. கொடுத்து விட்டு புறப்பட்டு வண்டியில் ஏறினர்.
பெரியம்மா கணவரிடம், பொட்டு தங்கம் கூட குறையாமல் பத்திரமா கொடுத்த மனுஷன் பைசா கூட வாங்கிக்கலை. ஆனா அல்பமா டீக்கு காசு கேட்டிட்டானே என்றாள்.
கணவர் சிரித்துக்கொண்டே ஏண்டீ நம்ம காசு அவனுக்கு வேணாமின்னா அவங்காசையுமா
நமக்கு விட்டு கொடுக்கணும். என்றார். சுப்பையாவை புரிந்த ஒரு மனுஷன்.
வண்டி புறப்பட்டது.

Sunday, 10 April 2011

ஒரு கால கட்டத்தின் அடையாளச்சின்னமாய்

காந்தி வாத்தியார் என்று எல்லாராலும் அழைக்கப்ப்டும் மாணிக்கம் சுதந்திரம் நாட்டுக்கு வருவதற்கு கொஞ்ச காலத்திற்கு முன் பிறந்தவர். அவர் தந்தை சுதந்திர போராளி. சுதந்திரம் கிடைத்து சில வருடங்களில் மாணிக்கம் பள்ளிக்கு வேலைக்கு வந்து விட்டார்.
தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் நடுவில் உள்ள அவர் ஊரிலிருந்து மற்ற ஊர்கள் தொலைவிலிருந்ததாலும் நடுவில் காடு இருந்ததாலும் அவரது ஊர் வெளி உலகத்திலிருந்து ஒதுங்கியே இருந்தது. அவர் குடும்பம் சொத்தும் பேரும் கொண்டிருந்ததால் அங்கு மதிக்கப்பட்டது. காந்தியின் கொள்கைகள் மதிக்கப்பட்ட காலம். மாணிக்கம் கதர் அணியவும் காந்தியை பின்பற்றவும் ஆரம்பித்தார். ஏழு வயதில் அவரது ஊரில் மூவர்ணக்கொடியேந்தி ஒரு தொண்டன் ஒரே ஒரு தொண்டன் தெருவில் நடந்தான். அவனுடன் மாணிக்கம் மட்டுமே கூட. சுப்பையா பிள்ளை என்ற ஒரு ஏட்டு எங்கோ இருந்த ராஜாவுக்கு விசுவாசமாகவும், கலகக்காரர்களை ஜென்ம விரோதியாகவும் நினைத்து அந்த த்தொண்டனை அடித்து வீதியில் இழுத்துச்சென்ற பொழுது மாணிக்கம் மட்டுமே அவனுக்குத்துணையாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். சுப்பையா பிள்ளை மாணிக்கத்தை வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு அவரின் ராஜத்துரோகத்தையும் புகார் சொல்லி விட்டு வந்தார். வெள்ளைக்காரனை தண்டிக்கும் கடவுளாக கருதும் அவர்கள் மாணிக்கத்தை பல நாட்களுக்கு வீட்டை விட்டே அனுப்பவில்லை.
சுதந்திரம்வந்தபின் ஆசிரியராக வேண்டுமென்று படித்து உள்ளூரிலேயே வேலைக்கும் சேர்ந்தும் விட்டார்.
வெள்ளையர்கள் வெளியேறினாலும் வறுமையும், அறியாமையும் வெளியேறவில்லையென்று அதை ஒழிக்காமல் மணம் செய்வதில்லை என்று முடிவு செய்தவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. சேவையென்பது கற்பித்தல் ஆயிற்று. பள்ளி அருகிலேயே ஒரு குடிசை, அது மெதுவாக வளர்ந்து ஒரு வீடு ஆனது. பள்ளி நேரத்தில் அங்கு கற்பித்தல். பின்பு வீட்டில். நாட்கள் வருடங்களாகி, மாணவர்கள் அவர்களின் பிள்ளைகள் பின்பு பேரக்குழந்தைகள் அவரிடம் கற்றார்கள்.
இது புதிதாக தலமை ஆசிரியர் வரும்வரை.
வந்தவர் புதிய யுகத்தவர். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலையில் அமர்ந்தவர்,தொலைகல்வியில் பட்டங்கள் பெற்று அதுவும் பலரின் உதவியில், பள்ளிக்கு ஆசிரியராக வந்தவர், கவனிக்க வேண்டியவர்களை கவனிக்கும் விதமாக கவனித்து பதவியில் உயர்ந்தார்.அதில் மாலா டீச்சரை ஒரு பள்ளித்துறை அலுவலருக்கு ஏற்பாடு செய்ததுவரைஅடங்கும்.
மாவட்டத்தின் பெரிய பள்ளியில் தலமை ஆசிரியராக இருந்தவர், நீட்டகூடாத இடத்தில் கையை நீட்டிவிட்டதால் வேலை போக இருந்தது. பிடிக்கவேண்டியவர்களை பிடித்ததால் வேலை மாற்றத்தோடு போனது.
தலைநகருக்கு மறுபடியும் போக அவர் முயற்சித்தார். அதற்கிடையில் வேலையும் கொஞ்சம் பார்த்தார். பள்ளியின் ஆவணங்களை புரட்டி பார்த்த பொழுது மாணிக்கத்தின் வயது அவருக்கு தெரிய வந்தது. எழுபது வயது கடந்தவர் இன்னும் வேலை பார்ப்பதா. அந்த வேலையை வேறு யாருக்காவது போட்டுக்கொடுத்தால் ஏதாவது தேறுமே, அது இல்லாவிட்டாலும் யாரையாவது திருப்திப்படுத்தினாலும் உதவுமே.
மாணிக்கத்திற்கு ஊரில் உள்ள மரியாதை தலைமை ஆசிரியருக்கும் தெரியும். ஆகவே கல்வித்துறையிலிருந்து உத்திரவு வந்ததுபோல் காட்டி ஓய்வு பெறுவதற்கு ஏற்பாடும் செய்துவிட்டார்.
மாணிக்கத்தை அழைத்து சார், உங்களுக்கு இப்படி நடந்த்தற்கு வருத்தமாகத்தான் இருக்கு, என்ன செய்ய, மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திச்சின்னா, கீழ்பட்டுத்தானெ ஆகணும் என்று சொல்லி உத்தரவைக்கொடுத்தும் விட்டார். மாணிக்கம் அதை பெரிது படுத்திக்கொள்ளவில்லை. கற்பிப்பதற்கு  பள்ளியறைதான் வேண்டுமென்பதில்லையே. கற்பவனும், கற்பிப்பவநும் எங்கு கண்டு கொள்கிறார்களோ அதுதானே பள்ளியறை. ஓய்வு பெற்றால் வைப்புத்தொகை வருமே, அங்குதான் மாணிக்கத்திற்கு சனி பிடித்தது. அவரை அண்டி யாரும் இல்லாத ஒற்றைபிறவிக்கு கையில் வந்த பல லக்ஷங்கள் தேவையில்லாத ஒன்று. அதற்கு செலவழிக்க, மாணிக்கம் கண்ட வழி, நகர் நடுவே காந்திக்கு சிலை வைப்பது.
முடிவு செய்தது அவர். பணத்திற்கு மனு போட பள்ளிக்கு வந்தவரிடம், தலைமை, பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என்று சாதாரணமாகத்தான் கேட்டார். அவர் சிலை வைக்க நினைப்பதாக சொன்னவுடன், தலைமை இது போல் ஒரு மனுஷன் இருப்பானா, அதுவும் இந்த காலத்தில் என்று வியந்தாலும், அதில் என்ன ஆதாயம் பார்க்கலாம் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.
முதலில் மனுஷனுக்கு எல்லா பணமும் வந்தாகவேண்டும்.  அதற்கான செலவை மனுஷன் செய்ய மாட்டான். அவர்தான் அதையும் செய்து முடிக்க வேண்டும், பிறகு அந்த பணத்தை செலவழிப்பதில் பங்கு பெறவேண்டும், வழிகளை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். அவருக்கா ஊரான் பணத்தை விழுங்குவதற்கு கற்றுக்கொடுக்கவேண்டும். கடைசி பைசா வரைசுருட்டுவதற்கு வழி கண்டுவிட்டார்.
பணம் மாணிக்கத்தின் கைக்கு வருவதற்குள் சிலைநிறுவன குழு உருவாக்கப்பட்டு விட்டது. உள்ளூர் சட்டசபை உறுப்பினர் குழுத்தலைவர், அவர் எல்லா கூட்டத்திற்கும் வருவதற்கு இயலாது என்பதால் தலைமை ஆசிரியர் உபதலைவராகவும் செயலராகவும் நியமித்துக்க்ஒண்டார்கள். சௌகரியமானவர்களை மற்ற உறுப்பினர்களாகவும் தலைமையே நியமித்து விட்டார். மிககவனமாக மாணிக்கத்தைத்தவிர வேறு யாரையும் அக்குழுவுக்குள் விடவில்லை.
முதல் குழு கூட்டத்திற்கு உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமை. தலைமை ஆசிரியரின் ஏற்பாடு. சமஉ ஆதியில் அந்த ஊர் மாட்டு தரகர். இப்பொழுது நூற்றுக்கணக்கான ஏக்கர் தோட்டம் பல தொழில். நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினர். இரண்டு கட்சிக்கும் போய்விட்டு வந்தவர். இரண்டு கட்சி தலைமைக்கும் வேண்டியதைச்செய்வதாலும் பல சட்டத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை முடித்துக் கொடுத்ததாலும் இப்பொதைக்கு வேண்டியவர். ஆனால் இப்பொழுது கொஞ்சம் பிரச்சினையில் இருக்கிறார். சில கணக்கு வழக்கு தகராறு. ஆளும் கட்சிக்கு நல்ல பிள்லையாக வேண்டும். மாணிக்கத்தின் காந்தி சிலை அவருக்கு முக்கியமே இல்லை. ஆனால் ஊரில் நடக்கும் ஒரு விஷயத்திற்கு முன்னின்றால் நாளை எதாவது ஆதாயம் கிடைக்கும். கூட்டத்தின் அமைப்புக்கு முதலாக பணம் செலவளிய ஆரம்பித்தது. ஒவ்வொருவருக்கும் அமர்வு தொகை. மாணிக்கத்திற்கு ஒரு பொது விஷயத்திற்கு கூடுவதற்கு ஏன் பணம் வாங்கவேண்டுமென்று தெரியவில்லை.
காந்தி சிலை செய்ய இடம் முடிவாயிற்று. சிலை செய்ய சிற்பி யாரென்பதில் முதல் சிக்கல். இதற்காக சமஉ சென்னை செல்லும்பொழுது குழு கூட செல்ல வேண்டுமென்று யோசனை சொல்லப்பட்டது. ஏனென்றால் ஊரான் செலவில் சென்னை சென்றால் சொந்த விஷயங்களை பார்த்துக்கொள்ளலாமல்லவா. மாணிக்கத்திற்கு ஏன் இதற்கு இத்தனை பேர் செல்ல வேண்டுமென்று தெரியவில்லை. வேண்டாமென்று சொல்லிப்பார்த்தார். பணம் அவருடயது ஆனாலும் குழுவில் அவரது குரல் ஒன்றுதானே. பெருவாரியானவர்கள் ஓட்டு சென்னை செல்வதற்கு. ஆகவே சென்னை செல்வதென்று முடிவாயிற்று. மாணிக்கம் செல்லவில்லை. செலவு நூறு, ஆயிரங்களைத்தாண்டி லட்சங்களை தொட ஆரம்பித்தது. மாணிக்கத்தின் விருப்பங்கள் நடக்காதது மட்டுமல்ல.  கணக்கில் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் மாணிக்கதின் பணம் செலவாவதைத்தவிர வேறு ஒரு முன்னேற்றாமுமில்லை.
ஊரின் முக்கிய முச்சந்தியில் காந்தி சிலை நிறுவுவது மட்டுமே பல கூட்டங்களின் முடிவில் ஏற்பட்ட முன்னேற்றம். குழுவின் முடிவிற்கு காத்திருக்காமல் மாணிக்கம் முச்சந்தியில் பீடத்தை கட்டிவிட்டார். அதற்குள் பாதிக்கு மேல் செலவாகிவிட்டதால் முழு உருவச்சிலை மார்பளவில் நிருவ முடிவாகியது.
அதற்குள் வேறு உருவில் வினை வந்தது. சென்னை சென்ற சட்ட மன்ற உறுப்பினருக்கு ஆளும் கட்சித்தலைவரின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
அவர் நிலைமை ஆட்டத்தில் இருந்ததால் அவர் ஏதாவது செய்தாக வேண்டும். அவர் முடிவு அதே முச்சந்தியில் ஆளும் கட்சி தலைவருக்கு சிலை வைக்க வேண்டுமென்பதே.
மாணிக்கம் காந்திக்கு சிலை வைப்பதால் யாருக்கு லாபம். அப்படியே வைக்க வேண்டுமென்றால் எதாவது வேறு இடத்தில் வைத்துக்கொள்ளலாமே.
காந்தி சிலை குழு அந்த இடத்தில் தலைவர் சிலை வைப்பதென்றும் மாணிக்கத்தின் பணம் அதற்கு உபயோகித்துக்கொள்லலாமென்றும் முடிவு செய்தது. மாணிக்கதின் ஓட்டு தவிர மற்ற ஓட்டுக்கள் இன்றைய தலவருக்கு. மாணிக்கத்தைத்தவிர மற்றவர்களுக்கு செத்துப்போன காந்தியை விட இன்று ஆளும் தலவர் பலசாலி என்பது தெரியாதா.
மாணிக்கத்தின் பணம் குழுவின் வங்கிக்கணக்கில் இருந்ததால் அவர் பணம் கூட அவருக்குக்கிடைக்கவில்லை.
வழக்காட அவர் விரும்பவில்லை.
அவருக்குத்தெரிந்த ஒரே அயுதம் அஹிம்சைதான். காந்தி கற்றுக்கொடுத்தது சத்யாகிரஹமும் உண்ணாவிரதமும்தான்.
அவர் உண்ணாவிரதம் இருக்கமுடிவு செய்ததுமட்டுமல்ல. அதற்கு தேர்ந்தெடுத்த இடம் அவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்திருந்த முச்சந்திதான்.
உண்ணவிரதம் ஆரம்ம்பிக்கும் வரை ஊர் சும்மாதான் இருந்தது. அவனவனுக்கு ஆயிரம் வேலைகள். இதில் எவனோ ஒருவன் உண்ணாவிரதம் இருந்தால் யாருக்கென்ன?
அதில் ஆதாயம் தேடுபரைத்தவிர. தலைமை ஆசிரியர் அடித்த கொள்லையில் பங்கு கிடைக்காதவர்களும், எதிர் கட்சிக்காரர்களும் மாணிக்கத்திற்கு ஆதரவு திரட்டினர். நான்கு நாட்களில் பத்திரிக்கைகள் செய்தியாக்கிவிட்டனர். கட்சித்தலைமை சம உ வை குடைய ஆரம்பித்துவிட்டது. சட்டமன்ற உறுப்பினருக்கு கௌரவப்பிரச்சினையாகி விட்டது.
சமஉ பிரச்சினைகளை சந்திக்காதவரல்ல. பிரச்சினைகளை தீர்க்கும் வகை வெட்டிவிடுவதுதான். இதற்கு அவருக்கு ஆயிரம் கைத்தடிகள் இருக்கிறார்கள். அவர்களின் ஒருவனிடம் வேலை கொடுக்கப்பட்டது.
 இதற்கென்றே ஊரில் ஆட்களிருக்கிறார்கள். இரண்டு மூன்று ஆட்கள் கடந்து நாலாவது, அய்ந்தாவது ஆள் மூலம் காரியம் முடியும். சந்தேகம் இருந்தாலும் நிரூபிக்க முடியாது.
ஏழாவது நாள் இரவு முடிச்சு மாரியப்பன் மூலம் முடிந்தது.
மாரியப்பன் செய்தால் கொலையென்று யாருக்கும் சந்தேகம் வரவே வராது.
மாணிக்கம் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் ஒரு சிறு வெயில் மறைப்புடன் படுத்திருந்தார். நீர் மட்டும் குடித்துக்கொண்ட உண்மையான உண்ணாவிரதம். உடல் பாதியாக இளைத்து சுயநினைவும் சரியாக இல்லாமல் படுத்திருந்தார்.
அரை பாடி லாரியில் மாரியப்பன். யாருமில்லாத இரவு. மாணிக்கம் என்ன அரசியல்வாதியா? ஆயிரம் தொண்டர்களுடன் ஆறுமணி நேரம் உண்ணாவிரதம் பின்பு ஆப்பிள் சாற்றுடன் உண்ணாவிரத்தை முடிக்க.
தனியாகப்படுத்திருந்த மாணிக்கத்தை லாரியில் வைத்து பீடத்துடன் தேய்த்துவிட்டு போய்விட்டான்.
காலையில் கூழும் குப்பையுமாக உருக்குலைந்து கிடந்தார். பொதுமக்கள் எதற்கு கொதித்தெழுவார்கள் என்று தெரியாது. சிலசமயம் நல்ல விஷயத்திற்கும் குரல் கொடுப்பார்கள். மாணிக்கத்திற்காக போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது. சம உ வேறு வேறு பிரச்சினைகளை விதம் விதமாக சமாளிப்பவர். ஒருவனென்றால் முடித்துவிடலாம். ஊரையெ முடிப்பதென்றால் கொஞ்சம்  கஷ்டம். அந்த அளவுக்கு இப்பொழுது போகவேண்டியதில்லை.
அதை விட சுலபம், அதை திசை திருப்பி விடுவது.
மாணிக்கம் சாவுக்கு, தன் சொந்த பிரச்சினைகளுக்கு என்று இரண்டுக்கும் வழி யோசித்தார். கிடைத்துவிட்டது.
மாணிக்கத்திற்க ஒரு சிலையை அதே இடத்தில் நிருவி விட்டு அதை திறப்பதற்கு கட்சித்தலைவரையே அழைத்துவிட்டால் இரு பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
சிலைதிறப்புவிழா கோலாலகல்மாக நடந்துமுடிந்தது. இறந்த மாணிக்கத்தைத்தவிர மற்ற எல்லோருக்கும் லாபம்தான். சம உ கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டார். தலைமை ஆசிரியருக்கு விழாக்குழு பொறுப்பு. நிதி வசூலிலும் வருமானம். மேலும் ஆளும் கட்சியிலும் நல்ல பரிச்சியம். பின்பு உதவுமல்லவா.
மாணிக்கம் சுயநலம் இல்லாத ஒரு காலகட்டத்தின் அடையாளச்சின்னமாக முச்சந்தியில் நிற்கிறார். சிலையாக இருப்பதால் அவருக்கு மேலும் மனக்கஷ்டமில்லை. அவர் உருவசிலைக்கு மரியாதை செய்து விட்டதால் மற்ற எல்லாவருக்கும் ஈடுசெய்துவிட்டதாக நினைப்பு. சுபம்தானே.

Saturday, 5 March 2011

ப்ரியம்

அந்த கார இருளின்
அலையும் நெடுங்கடலின்
அசையும் சிறு படகின்
எரியும் சிறு விளக்கின்
தெரிக்கும் ஒருதுகளின்
பகுதியேனும் உளதோ
என்னிடத்தில் ப்ரியம்
சகியே?

Thursday, 3 March 2011

எனக்கு தேவை என்னுடைய காட்டில் இன்று மழை


நுகத்தடியில் பூட்டிய மாடுகள் தளர்நடை போட்டன. ஏர்க்கால் மணலில் கோடு கிழித்தபடி போனது. ஙீஙீ என்ற சப்தம். காலையில் பூட்டிய ஏரை பதினோரு மணிக்கு அவிழ்த்துவிட்டு கொஞ்ச நேரம் படுத்தேன். பின்பு கொஞ்ச நேரம் தண்ண்ணீர் பாய்ச்சிவிட்டு மறுபடியும் பிடித்த ஏர் ஆறு மணிக்குதான் மாடுகளை அவிழ்த்து வீட்டிற்கு கொண்டு செல்கிறேன். மாலையில் மலைகளுக்கு பின் சூரியன். இன்னும் வெப்பம் குறையவில்லை. சுடும் பாதை மணல் பொத்து போன கால்களுக்கு இதமாக இருந்தது. இடுப்பில் இருக்கும் கோடு போட்ட பட்டா பட்டிடிராயரைத்தவிர உடலில் துணியில்லை. வெயிலில் வழக்கமாக வேலை செய்வதால் பாதம், உள்ளங்கை தவிர மற்ற பாகங்களெல்லாம் கருத்திருந்தன. காலில் சாக்ஸ் போட்டது போல் தூசி.
மனம் வீட்டில் ஆத்தா போட்டுவைத்திருக்கும் சுடுநீருக்கும் குளியலுக்கும் ஏங்கியது. மதியம் தூக்குசெட்டியில் இருந்த பழைய சோற்றை வெங்காயத்துடன் சாப்பிட்டது.சுடுசோறும் காரமான குழம்பும் வீட்டில் இருக்கும். ஒரு பிடியும் ஒவ்வொரு பிடியும் அமிர்தமாக இருக்கும். காற்றில் ஈரப்பதம் தென்பட்டது. மழை வருவதற்கான அறிகுறிகள். எங்கள் காட்டில் நீருள்ள கிணறு இருந்தாலும் மழைத்தண்ணீர் போல பயிருக்கு கிணற்று நீர் உதவாது.
எங்கள் ஆறு ஏக்கர் தோட்டம் மலை அடிவாரத்தின் பக்கத்தில் இருந்தது. ஊரிலிருந்து நாலு கிமீயாவது இருக்கும். அது ஒன்றுதான் இப்பொழுது இருக்கும் சொத்து. குடியானவன் எனும் கூட்டத்தில் இருந்து நிலக்கிழார் என்று சொல்லிக்கொ̀̀ள்ள வைப்பது. இதுவும் போக இருந்தது. அதை பின்னெ சொல்கிறேன். மாலையும் கருக்கும் மேகங்களும் காற்றில் குளிரை கொடுத்தது. ஏர்க்காலில் தூக்குசெட்டிக்குள் போட்டிருந்த வேட்டியை மேலே போட்டுக்கொண்டேன். இன்னும் பாதிதூரத்திற்கு மேல் இருந்தது வீட்டிற்கு. ஆனால் மாடுகள் போகும் வேகத்தில்தான் போகமுடியும். இதுபோல் சூழ்நிலைக்கு ஏற்ப என் நோக்கங்களை மாற்றிக்கொள்வது சமீப காலமாகத்தான்.
இரண்டு வருடங்களுக்க முன்பு வரை ஏர் உழுவேன் என்றோ, வயலில் வேலை செய்வேன் என்றோ நான் கனவிலும் நினைக்க வில்லை. அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை பள்ளியில் நன்றாகவும் படித்தேன். காட்டில் வெயிலில் காயாமல் பிள்ளை சுகமாக வாழவேண்டும் என்பதுதான் என் தாயின் ஆசை. அப்பாவும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. வேறு பிள்ளைகள் இல்லாததால் விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக தந்தை ஏறக்கட்டிவிட்டார். நான் கல்லூரி செல்லும் பொழுது இந்த ஆறு ஏக்கரைத்தவிர நிலம் ஒன்றும் கைவசம் இல்லை. அதுவும் ஏனோ தானோ என்ற விவசாயம். பாதி நாட்களில் நொந்த வெள்ளாமை, அதாவது விதைத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டு அறுவடைக்குத்தான் அடுத்த விஜயம். காடு களையிழந்து களை மண்ட ஆரம்பித்தது.
ஒரே மகன் ஆகையால் எல்லோரைப்போல அரசு கலைக்கல்லூரிக்கு போகவில்லை. சென்னையில் இருந்த பேர் சொல்லும் படியான கல்லூரி. அது ஆண், பெண் இருவரும் படிக்கும் இடம். அங்கு எனது உலகம் மிகவும் விரிய ஆரம்பித்தது. பெண் நண்பர்கள் ஆண் பெண் உறவு காமத்தையும் தாண்டி இருக்கமுடியும் என்று கற்று க்கொடுத்தனர். மேலாடை விலகுவதை கவனிக்காமல் தத்துவங்களை பேசும் பத்மினியின் மாரை விட பேசும் விஷயம் கவர்ந்தது. முதலில் பேச்சால் கவரப்பட்ட நான் அது போன்ற நண்பர்களை  மதிக்க கற்றுக்கொண்டேன். கல்வியுடன் உலகநோக்கும் வந்தது.
கல்லூரி பலதரப்பட்டவர்களை சில காலம் ஒரே தட்டில் வைத்திருக்கிறது. அது முடிந்ததும் நம் நிதர்ஸன உலகிற்கு நாம்தான் எழுந்து வரவேண்டும். அதற்கு எனக்கு இரண்டு வருடங்களாகின. சென்னைக்குப்போவதும் வேலைக்கு விண்ணப்பிபதும் முக்கியமான வேலையாகியது. என்ன படித்தாலும் முதல் வேலையை பிடித்துக்கொண்டு அப்புறம் அடுத்ததற்கு தாவ வேண்டுமென்று அப்பொழுது தெரியவில்லை. பலன் இரண்டு ஆண்டுகள் வெட்டியாகத்திரிந்தேன்.
வெள்ளையாக உடுத்திக்கொண்டு ஊரில் திரிவது தப்பாகப்படவில்லலை. வேலைக்குத்தான் இப்பவோ அப்பவோ போய்விடுவோமே, ஆகையால் சும்மா இருப்பது தப்பில்லை என்று சோம்பித்திரிந்தேன்.
இரண்டு விஷயங்கள் என்னை நிஜவாழ்க்கைக்கு தரதரவென்று வலிக்கவலிக்க இழுத்து வந்தன.
வழக்கமாக கலை என்னும் கலைச்செல்வன் பெட்டிக்கடை பின்னால் என் போன்ற வெட்டிகள் கூடுமிடம். கடை நிஜமாகவே ஒரு பெட்டிதான். ஆறடி உயர, அகல, நீள பெட்டி. ஒரு பக்கத்தை திறப்பாக விட்டு விட்டு அதை நான்கடி உயர்கல்தூண்களில் நிருத்தியிருந்தான். சுவற்றிற்கும் கடைக்கும் மூன்றடி இடைவெளி. பகலில் என்போன்றோர் அவனிடம் வாங்கும் சிகரெட் புகைப்பதற்கும், அதே இடம் இரவில் குடிப்பதற்கும் பயன்படும். நான் குடிப்பதில்லை. சென்னையில் நண்பர்கள் வீட்டில் வைன் போன்ற மதுவை அவர்கள் வேண்டுதலுக்காக சுவைத்திருக்கிறேன். இவர்கள் குடிக்கும் சாராயத்தில் சிறிதும் நாட்டமில்லை.
கடிதங்கள் வாங்குவதற்கு செட்டியார் வீட்டிற்கு போகவேண்டும். அவர் கிராமத்தின் சம்பளமில்லாத தபால்காரர். எங்கள் ஊருக்கு தினம் ஒரு முறை வரும் தபால்காரர். செட்டியார் கடையில் ஒரு இலவச குளிர்பானம் குடித்துவிட்டு எல்லா தபாலையும் போட்டு விட்டு போய் விடுவார். எல்லோரும் அங்கு சென்று பெற்றுக்கொள்ளவேண்டும். அவர் கார்டு, தபால் உறை, ஸ்டாம்பு முதலியவற்றை வாங்கி வைத்திருப்பார். வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் காசு கூட ஆகும். வழக்கமாக வீட்டிற்கு உள்ளே சென்று கடிதம் பார்த்துவிட்டு சும்மா பேசி விட்டு வருவேன். அன்றும் உள்ளே பொனேன். செட்டியார் வழக்கத்திற்கு மாறாக "வெளியே உட்காரு தம்பி" என்றார். சுரீர் என்றது.நான் அரசாங்க பட்டியலில் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று குறிக்கப்பட்டவன். எங்கள் கிராமத்தில் அது என்றும் பெரிதாகப்பட்டதில்லை. செட்டியார் என அப்பாவையோ, அம்மாவையோ என்றும் வித்தியாசமாக நடத்தியதில்லை. கைவசம் இருந்த நிலமும் வசதியும் எங்கும் வெளியே நிற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியதில்லை. முதன் முதலாக என் ஜாதி அடையாளம் எனக்கு வலித்தது. அதே வேதனையுடன் கலை கடைக்கு வந்து சிகரெட் கேட்டேன். காசு என்று அவன் கேட்டது அடுத்த அடி. இத்தனை நாள் இல்லாமல் அவன் முதலில் காசு கேட்டது வித்தியாசமாக ப்பட்டது. ஏன் என்று கேட்டதற்கு வேலையில்லாதவனிடமிருந்து காசு எப்படி வசூலிப்பது என்று கேட்டான். அன்று விட்டேன் சிகரெட்டை. வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவிடம் அழுதேன். தம்பி, செட்டியார் வெளியே நிற்கவைத்ததற்கு காரணம் உன் ஜாதியில்லை, உன் பொறுப்பில்லாத நிலைமை என்றாள். இருக்குமோ என்று தோன்றியது.
அடுத்த நாள் அப்பாவுடன் தோட்டத்திற்கு போக ஆரம்பித்தேன். மெதுவாக உழுவதிலிருந்து தண்ணீர்  பாய்ச்சுவதுவரை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தேன். வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. அடுத்த பயிர் ம̀ழைஉழவு என்று முற்றிலும் வேறான பாதையில் வாழ்க்கை போக நேர்ந்தது. என்றோ அனுப்பிய விண்ணப்பங்களுக்கு வேலை காலியில்லை என்ற பதில்களை வாங்கத்தவிர வேறு ஒன்றுக்காகவும் கௌரவ போஸ்ட் மாஸ்டரை போய் பார்ப்பதில்லை. கலை கடையும் அதில் தென்படுபவர்களும் மிகவும் அன்னியமாகிவிட்டனர். வாழ்க்கை என் முன் செல்லும் மாடுகளுடையதைப்பபோல ஒரு வட்டத்திற்குள். அப்பா ரிடையரானவர்களைப்போல திண்ணையில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார்.என்றாவது பத்மினியைப்பொன்ற நண்பர்களிடமிருந்து கடிதங்கள் வரும். அதை த்தவிர கல்லூரி வெளியுலகம் போன்றவை தூரப்போய்விட்டன. இன்னும் இரண்டு கிமீயாவது போனால்தான் வீடு. மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. வடகி̀ழக்கில் மேகம் கூடியதென்றால் மழை நிச்சயம். வடகிழக்கில் கருத்தால் எப்படி மழை வருமென்று ஊர் பெருசுகளிடம் விவாதித்திருக்கிறேன். கல்லூரி செல்லும் வரை. ஒரு நாள் இதை ஹாஸ்யமாக கல்லூரியில் சொல்லப்போய். எம்பைரிஸிஸ்ம் என்ற வார்த்தையை கற்றுக்கொண்டேன். ஒரு நிகழ்வு நடந்த்தால் அதுவும் அடிக்கடிக்கு மேல் நடந்தால் எப்படி என்பதை விட அது நடக்கும் என்பதை ஒத்துக்கொள்ளவும் பின்பு அது எப்படி நடந்தது என்று பார்த்துக்கொள்ளலாம் என்றும் கல்லூரி கற்றுக்கொடுத்தது. இப்பொழுது எனக்கு எப்படி நடக்குமென்பதைவிட நடப்பதுவே முக்கியமாக போய்விட்டது.
யாருமில்லாத பொழுது எதனாவதுடன் பேச வேண்டுமே. மாடுகளுடன் பேசத்தொடங்கினேன். பின்பு அதுவே பழக்கமாகிவிட்டது. நாளில் பெரும்பகுதி அவைகளுடந்தானே. உலகம் மிகச்சுருங்கிவிட்டது. எங்களது ஆறு ஏக்கர் நிலத்தை இப்பொழுது யாரும் விலைக்கு கேட்பதில்லை.
மாடுகள் மந்தகதியில் நடந்தன. உழவுகாட்டில் என்ன விதைப்பது. கிணற்றில் வேண்டிய தண்ணீர் கிடைக்குமா, கால மழை கிடைக்குமா என்று பல நினைவுகள். வீடு வரை இந்த நினைவுகள் கூட வந்தன.
வீடு வந்தவுடன் மாடுகளை அவிழ்த்து கட்டி விட்டு நேரே குளிக்க நுழைந்தேன். சுடு நீர் அலுத்த உடலுக்கு இதமாக இருந்தது. ஒரு வாளி தண்ணீர்தான் குளிக்க கிடைக்கும். ஆனால் அதுவே பழகிவிட்டது. குளித்து வீட்டிற்குள் வந்து சாப்பிட உட்கார்ந்தேன். வட்டிலில் சோறும் குளம்பும் விழுந்த பொழுது அம்மா சொன்னாள். போஸ்ட் மாஸ்டரையா கடிதாசி வந்திருக்குன்னு சொல்லிட்டு போனார்டா. சாப்பாட்டில் மனசு போகவில்லை. ஆனாலும் பசியில் முழுதும் சாப்பிட்டு விட்டுத்தான் எழுந்தேன்.
வெளியே வந்த பொழுது மழை நன்றாக பிடித்துக்கொண்டது. மழையில் போகவேண்டுமா என்று ஒரு எண்ணம் தோன்றினாலும் போய்த்தான் பார்ப்போமே என்று நனைந்து கொண்டே போனேன்.
போஸ்ட் மாஸ்டரின் வீட்டுக்கு போனேன்.
வாங்க தம்பியென்று அவர் கூப்பிட்டது புதிது. வெளியே நின்று கொண்டேன். உள்ளே போவது நிச்சயமாக இல்லை. உள்ளே போய் பழுப்பு உறை ஒன்று கொண்டுவந்து கொடுத்தார். மழை பெய்யும் இரவில் வீட்டினுள்ளிருந்து வந்த வெளிச்சத்தில் எனது விடுதலை வந்திருந்தது தெரிந்தது. என்றோ விண்ணப்பித்து விட்டு வராது என்று நினைத்த அரசு வேலை. மங்கலான தட்டச்சு எனக்கு ரெவென்யு இன்ஸ்பெக்டர் வேலை என்று அறிவித்தது. அடுத்த மாவட்டத்திலுள்ள ஒரு வட்டார அலுவலகத்தில்.
 பத்மினியின் உபயத்தில். சென்னையில் ஒரு அதிகார உள்வட்டமிருக்கிறது. அது என்றும் யார் ஆண்டாலும் அதிகாரத்திலிருக்கும். அது வேண்டியவர்களுக்கு அவர்களின் நெருக்கத்திற்கேற்ப வரமளிக்கும். எனக்கு அந்த வரம் கிடைத்தது. அரசு வேலை. இனி ஏர் பிடித்து நிலத்தில் உழ வேண்டியதில்லை. மழை வருமா. பயிர் விளைந்து வீடு  வருமா என்ற கவலை இனி இல்லை.
தினமும் காகிததில் உழுது மாத இறுதியில் அறுவடை. வானம் பொய்த்தாலும் விளைச்சல் குறையாது. வெயிலில் காயவேண்டியதில்லை. வருட முடிவில் உப பயிராக ஒரு ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
ஒரு நிமிடத்தில் கிராமமும், விவசாயமும் அன்னியமாகிவிட்டது.
தோளுக்கு ப்பின்னால் செட்டியார் கடிதத்தை  படித்து விட்டார். மழை மேலே விழாமல் வீட்டின் முன்வாசலில் நின்று கடிதத்தை படித்துக்கொண்டிருந்தேன். அவர் மகா கரிசனமாக வீட்டுக்குள்ள வந்து உட்காருங்க தம்பி என்றவுடன் சிரிப்பு வந்தாலும், அடக்கிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தேன்.
வீட்டில் சொல்லி விட்டு வேலைக்கு சேர ப்பார்க்கவேண்டும். என்னுடைய காட்டில் இன்று நல்லமழை.
 

Sunday, 20 February 2011

அன்னியமாகுதல்

நான் வெட்டுப்பட்டு வீழ்ந்த அந்த கணத்தில் நான் என் ஊரின் கொள்கைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்தும் எவ்வளவு அன்னியமாகிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். சாகும் தருணத்தில் வாழ்ந்த வாழ்வு முழுவதும் ஒரு கணத்தில் தோன்றுமாமே. அது எனக்கு வாய்த்தது.
என் வாழ்க்கை முழுவதும் கண் முன் தோன்றினாலும் சொற்ப விஷயங்களையே எடுத்துரைக்க முடியும். இதை நீங்கள் படிக்குமுன் என் வாழ்வு முடிந்திருக்கலாம், அல்லது நான் பிழைத்திருக்கலாம். அது முக்கியமல்ல. என் உணர்வுகளும் அனுபவங்களும் உரைக்கப்பட்டு, நினைவில் வைக்கப்பட வேண்டும்.
முதல் காட்சி. சிறு கிராமமான எனது ஊரில் நாங்கள் மேலும் இல்லாத கீழும் இல்லாத ஒரு ஜாதி. நடுவாந்திரமாக இருந்தாலும், வசதியினாலும், எண்ணிக்கையினாலும் மேல் தட்டில் இருந்தோம். அடுத்தவனை அழுத்தி வைத்திருப்பது, வாழ்க்கைக்கு தேவையாக இருந்தது, மேலும் சௌகரியமாகவும் இருந்த்தது. பழக்கத்தில் இருப்பதை மாற்ற எனக்கு தோன்றவும் இல்லை. தோன்றியிருந்தாலும் மாற்றி அமைக்க என்னால் தனியாக முடிந்திருக்காது.
ஊரில் வலிமையான ஜாதி என்றாலும் அரசு ஏடுகளில் பின் தங்கியவர்களாக கருதப்பட்டோம். அதில் உள்ள ஆதாரமான அபத்தம் யாருக்கும் தோன்றவில்லை. என் கிராமம் ஒரு தனித்தீவல்லவே. படிப்பிற்கும், பிழைப்பிற்கும் மற்ற இடம் செல்லும் பொழுது அங்கு பற்றும் கொம்புகள் எங்கள் எண்ணங்களை மாற்றுவதற்கு பதிலாக மேலும் ஆழமாக பதிக்கவே உதவியது.
ஊரில் அடிமைப்பட்டு கிடந்தவன் நேர் கொண்டு பார்ப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. அதன் விளைவாக வார்த்தையிலும் செயலிலும் மோதல்கள். என் சின்ன உலகை நகரம் விசாலப்படுத்தவில்லை. அல்லது நாங்கள் அதை அனுமதிக்கவில்லை. வன்மம் கொண்டு அலைவதும், சந்தர்ப்பத்தில் அடுத்த கும்பலைச்சேர்ந்தவர்களை தாக்குவதும் வழக்கம். அது போல் ஒரு நிகழ்வில் ஒரு பெண்ணை சந்தித்தேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எங்கள் சண்டை எவ்வளவு சிறுமையானது என்று நான் அறிந்த நாள். கைகலப்பில் அன்று எங்களுக்கு வெற்றி. எதிரியென்று நான் நினைத்தவர்களில் பலருக்கு அன்று ரத்த காயம். பட்டினத்து தெருவில் ஜனம் சுற்றி நின்று பார்க்க யுத்தம். எங்களுக்கு வெற்றி. மார் உயர்த்தி, கால் பரப்பி நடந்தோம். பார்த்த பலரின் அறுவெறுப்பும், ஆதங்கமும் கண்களுக்கு படவில்லை.பலர் சேர்ந்து சிலரைத்தாக்கும் பொழுது பயமில்லை. வேட்டையாடும் கோர வெறி, குறையும் பொழுது, புணர்ந்து எழும் பொழுது ஏற்படும் ஒரு  உணர்வைப்போல சுகமான ஒரு சோர்வு தெரியும். என் இந்த போதைகளையும் மீறி அந்த நாற்பது வயது வேற்று நாட்டுப்பெண்ணின் முக பாவங்கள் மனதில் பதிந்தன. அன்று அக்கணம் என்னைத்தாக்கவில்லை. அது வேறு ஒரு கணத்தில் நடந்த்தது.
காலம் என்னை நதியில் மிதக்கும் சருகைப்போல வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்த்தது. படித்ததும் பட்டம் வாங்கியதும் அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத வேலை அமைந்ததும் சாதாரணர்க்கு ஏற்படுவதைப்போல எனக்கும் ஏற்பட்டது.
வேலையினால் வெளிதேச வாழ்க்கை.படிப்பு வேலையையும் தாண்டி தோல் நிறத்தால் கீழென்று மதிக்கப்படும் சந்தர்ப்பங்கள். சிறுபான்மையை சேர்ந்த ஒருவன் நேரடியாகவும் மறைமுகமாகவும் நசுக்கப்படுவது வலித்தாலும் என்னுள் வேறு மாற்றங்களை என் ஆதார துவேஷங்களை மாற்றும் தருணங்களை ஏற்படுத்தவில்லை.
காட்சி இரண்டு.
வேலை பார்க்கும் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் செல்ல வண்டியிருந்ததால் எனக்குள் ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு வெளி உலகில் ஒட்டாமல் வாழ முடிந்த்தது. அலுவலகத்தில் வேலை நிமித்தம் சந்திப்பவர்கள் உண்மையாக பழக நேர்வதில்லை. வேலை தாண்டி உறவு இல்லாத்தால் அவர்கள் என்னைப்பற்றி உண்மையாக என்ன நினைக்கிறார்கள் என்று அறிவதற்கான சந்தர்ப்பங்களும் அமைய வில்லை. மூன்று அல்லது ஆறு மாதங்களே அவர்களுடன் இருக்க வேண்டியிருந்தது. ஆகவே ஒட்டோ உறவோ ஏற்படவும் இல்லை. ஒரு நாள் இன துவேஷத்தை நேருக்கு நேர் அனுபவிக்கும் வரை. அன்று நகரத்தின் மையத்தில் உள்ள கடைகளுக்கு சென்றேன். மிக குறைந்த விலையில் பொருட்கள் அங்குதான் கிடைக்கும். பார்ப்பதற்கு பார்வையாக ஷோகேஸில் வைக்கும் பொருட்கள் ஒன்றுக்கும் உபயோகமில்லாதவையாக் ஆனால் வெகு நாட்கள் பார்வையிலும் நினைவிலும் இருக்கும். குறைந்த விலை என்று கணிக்க முடியாது. அதே பொருட்கள் மற்ற கடைகளில் விலை அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் சிலருக்கு வாங்கிக்கொண்டு கொடுக்க வேண்டும். இதெல்லாம் வெளிதேச வாழ்க்கையில் சகஜமான விஷயங்கள். குளிர்காலத்தில் சீக்கிரம் இருட்டி விடும். மாலையில் சென்று பொருட்கள் வாங்கிகொண்டு நண்பர்களை பார்த்துவிட்டு வரவேண்டும். கடை கடையாக ஏறி இறங்கி பார்த்துக்கொண்டே வந்த்ததில் வழி தப்பி ஒரு தெருவில் நுழைந்து விட்டேன். வெளி நாடுகளில் ஆபத்திற்கும், பத்திரத்திற்கும் ஒரு தெருதான் வித்தியாசம். ஆபத்தும் திடீரென்று வரும். சில அடிகள் நடந்தவுடன் பின்னால் காலடிகள் கேட்டு திரும்பினேன். பதினேழு பதினெட்டு வயதுடைய நான்கைந்து சிறுவர்கள். வயது குறைவாக இருந்தாலும் தடி மாடுகள். புத்தியும் அந்த அளவில்தான் இருக்கும். தனியாகவோ, போதையில் இல்லாமலோ இருந்தால் பயமில்லை. இவ்விரண்டில் ஏதாவதொன்றோ அல்லது இரண்டும் சேர்ந்திருந்தாலோ உயிருக்கோ உடமைக்கோ ஆபத்து. என்ன செய்வதென்று தெரியவில்லை.
அட்ரீனலின் உடலில் பாய ஓடவோ, சண்டை போடவோ தயாரானேன். எதிர்த்து நிற்பவனை தாக்க யாராவது ஒருவன் ஆரம்பித்தால் மற்றவர்கள் வேட்டை நாய் போல் பாய்வார்கள். அதற்கு முன் ஏதாவது நடந்தால் தப்பிப்பேன். சண்டை போட தயாரானேன். திடீரென்று தெருமுனையிலிருந்து சப்தம். ஒரு இந்தியப்பெண். பெருங்குரலில் கத்திகொண்டு கையையும் காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். கூட்டம் கூட அரம்பித்தது. பையில் இருந்து காசையும் பணத்தையும் எடுத்து அவர்கள் முன்னால் வீிசினாள். அவர்கள் குனிந்து பணத்தையும் பொறுக்க ஆரம்பித்தனர். மெதுவாக நடுவில் புகுந்து நகர்ந்தேன்.காசா நானா என்று அவர்கள் முடிவு செய்வதற்குள் நாங்கள் ஓட ஆரம்பித்தோம். எனக்கு மூன்று தப்படிகளுக்கு முன் அவள் ஓடிக்கொண்டிருந்தாள். உயிராபத்திலும் அவளது பின்புறம் என்னை கவர்ந்தது. ஏதோ உணர்வில் திரும்பிப்பார்த்தவள் என் பார்வையின் திவிரத்தில் தடுமாறி விழப்போனாள். உணர்வின் பால் யோசிக்காமல் அவளைப்பிடித்து கீழே விழாமல் தடுத்தேன். உடல் தொட்டது எங்கள் இருவருக்கும் உணர்ச்சிகளை தூண்டியது. வேகத்தை குறைத்து நடக்கலானோம். ஆசுவாசப்படுத்திக்கொண்டு பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம். இருவருக்கும் பிரிய மனமில்லை. தயங்கித்தயங்கி பேச்சை வளர்த்தோம். மீண்டும் சந்திக்க முடிவுடன் பிரிந்தோம். இந்த நிகழ்வில் ஏனோ அன்று முன்பு பார்த்த வெளி நாட்டு பெண்ணின் முகம் அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளும் நினைவில் வந்தன. இன்னும் அந்த உணர்வின் தாத்பரியம் இன்னும் பிடிபடவில்லை.
அவள் பெயர் தேன்மொழி. மென்பொருள் தொழிலில் ஒரு இந்திய கம்பெனியின் வெளி நாட்டு அலுவலகத்தில் வேலை. மற்ற வேலைசெய்வோருடன் தங்கியிருந்தாள். நமது நடத்தையை நிர்ணயிக்கும் அந்த நாலு பேர் இங்கு இல்லாததால் எங்கள் பழக்கம் தொடர்ந்தது. அவளை எனக்கு பிடித்திருந்தது. உறவு பழக்கத்தில்இருந்து அடுத்த கட்டத்திற்கு சென்றது. மணந்து கொள்ள முடிவு செய்த பொழுதுதான் அவள் ஜாதியும், ஊரும் தெரியவந்தது. அவள் எங்கள் எதிர் ஜாதி. ஊரும் ஊருக்கு அடுத்து. அவள் சொந்தம் எங்கள் ஊரில் எங்களுக்கு எதிராக. இருவரும் இதை எப்படி எதிர்கொள்வது என்றே சிந்தித்தோம். முடிவை மாற்றிக்கொள்ள இருவருக்கும் தோன்றவில்லை. மணந்து கொள்வதற்கு முன் வீட்டிற்கு சொல்லி சம்மதம் கேட்பதில் அர்த்தமில்லை.தீவிரமான எதிர்ப்பிருக்கும். மணந்து கொண்டு வீட்டிற்கு சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். மணமும் முடிந்து ப்ரணவும் பிறந்தான். அவன் மூன்று வயதை அடையும் வரை நாங்கள் இந்த நாட்டுக்கு வரவில்லை. கடிதங்கள் முதலில் கோபமாக வந்தன. பின்பு அதுவும் நின்று விட்டன. தின வாழ்க்கையில் ஊரும் அதன் கோபங்களும் பின்சென்று மறைந்து விட்டது. ஊருக்கு திரும்பி நகரத்தில் தங்கி விட்டோம். ஒரு நாள் என் பெற்றோர் அழையாமல் சொல்லாமல் வீட்டுக்கு வரும் வரை.
ஆத்தா சாகக்கிடக்காப்பா. ஒரு எட்டு வந்து பாத்துட்டு போயிடுப்பா. மகன் எப்படியிருக்கிறான் என்ற கேள்வியில்லை. மருமகள் இருப்பதாக காட்டிக்கொள்ள வில்லை. சிரிப்பு வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் உட்காரவும் சாப்பிடவும் அழைத்தேன். ஆத்தா என்று சொன்னது என் பாட்டியை. என்னை வளரும் வரை மண்ணில் விடாமல் வளர்த்தவள். பாசம் போகச்சொன்னாலும் போகப்பிடிக்கவில்லை. மெதுவாக சொல்லி அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தேன். சாப்பிடாமலே புறப்பட்டு விட்டனர். ப்ரணவிடம் மட்டும் சொல்லிவிட்டு ஏதோ கையில் கொடுத்து விட்டு போனார்கள்.
ஊரிலிருந்து வந்த ஒரு கடிதம் எங்களை ஊருக்கு கொண்டு சேர்த்தது.ஆத்தா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தது. ஊரில் வந்து இறங்கியதும் ஜாதிக்கட்டுப்பாட்டை மீறிவிட்டதால் பஞ்சாயத்துக்கு வருமாறு உத்தரவு. அது எங்களுக்கு அர்த்தமற்றதாகத்தெரிந்தாலும் போவதென்று முடிவு செய்தோம். வீட்டில் போய் நுழைந்தவுடன் ஆத்தாவை நாங்கள் இருவருமாக பார்த்தோம். ஆத்தா என்னுடனும், ப்ரணவுடன் நன்றாக பேசினாள். தேனைஅவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. எதிர் பார்த்ததால் பெரிதாக அதிச்சியடைய வில்லை. மனைவியை வீட்டில் இருக்கச்சொல் லி விட்டு பஞ்சாயத்து நடக்குமிடத்திற்கு தனியாகப்போனேன். ஜாதியிலிருந்து தள்ளி வைப்பதாக தீர்ப்பு சொன்னார்கள். அதுவும் எதிர்பார்த்ததுதான். திரும்பி வரும்பொழுது தேன் எதிரே வந்தாள். அப்பொழுதுதான் எதிர்பாராதது நடந்தது.
என் தம்பி கையில் அரிவாளுடன் ஓடி வந்தான். பதினே̀ழு வயது. நான் வீட்டை விட்டு போகும் பொழுது பள்ளி போக ஆரம்பித்தவன். முகத்தில் அவ்வளவு குரோதம். செய்த பாவத்திற்கு தண்டனை கொடுக்கும் தேவதூதன் போல முகம். அனிச்சையாக முன்னே ஓடி தேனை என் பக்கம் இழுத்தேன். நான் பார்த்து வளர்ந்த அவன் அரிவாளை தூக்கும் பொழுது தாக்க ப்படுகிறோம் என்ற பயம் வரவில்லை. ஒரு விபத்தை தடுக்கும் உணர்வே தூக்கி இருந்தது. அவளை இழுத்து போடும்பொழுது அரிவாள் என் மீது பாய்ந்தது. கூர்ந்த முனை என் இடது தோளில் பாய்ந்து கீழே விழுந்தேன். ரத்தம் நான் பிறந்த மண்ணில் ஓட அரம்பித்தது. தான் செய்த காரியத்தின் விளைவு என் தம்பியை அங்கேயே சிலையாக நிற்க வைத்தது. இவ்வளவும் ஓடி நின்ற அந்த கணங்களில் அந்த நாற்பது வயது தாயின் உணர்ச்சிகளுக்கு அர்த்தம் புரிந்தது. "ஏண்டா மடையர்களா, உங்களுக்குள் என்ன வேற்றுமைகளுக்காக இப்படி அடித்துக்கொண்டு சாகிறீர்கள்?”

Sunday, 13 February 2011

தூர தேசத்திலிருந்து

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து தமிழ் நாட்டை பார்க்கும் பொழுது ஒரு சமச்சீர்தன்மை வரவேண்டும், ஆனால் வரவில்லை. சமகால நிகழ்வு கள் எம்மைப்போன்றோர்களை நிதானமாக Neutral ஆக இருக்க விடுவதில்லை.
அஙகு இருக்கும்பொழுது இருந்த biasகள் இஙுகும் எங்களைத்தொடர்கின்றன. அங்கு நடக்கும் அரசியல் விஷயங்கள் மிககவலையை ஏற்படுத்துகின்றன. அங்கு இருப்பவர்கள் ஏதேனும் செய்க.
ஏதும் முடியா ஒருவன்