அந்த சாலை ஊரிலிருந்து மலைஅடிவா ரத்தில் இரண்டு சாலையாக பிரிந்தது. ஒன்று மலை தாண்டி கேரளா சென்றது. மற்றொன்று சில கல் தொலைவில் காபித்தோட்டங்களூடே முடிந்தது. சாலை பிரியும் இடத்தில் சில கடைகளில் ஒன்று சுப்பையாவுடையது. அவர் சில வருடங்களுக்கு முன் திடீரென்று அங்கு வந்து கடை போட்டார்.கூட மனைவி. இருவரும் கெச்சலான உடம்பு. ஆனால் கடும் உழைப்பாளிகள். சில நாட்களிலேயே வியாபாரம் சூடு பிடித்தது.
சுப்பையா ஒடிசல் உடம்பு. எப்பொழுதும் மேலெ துணியில் தைத்த பனியன் போல ஒரு பனியன், கீழெ ஒரு பட்டா பட்டி துணியில் ஒரு வேட்டி. சிரிக்க மறந்த முகம். முகத்தில் பல் துலக்கும் ப்ரஷ் போல மீசை. பற்கள் இடைவெளி விட்டு கறையுடன். வாயில் எப்பொழுதும் இருக்கும் புகையிலையினால். காலையில் உணவு உண்டு விட்டு பின் புகையிலை போட்டால் எப்பொழுது வாய் கொப்பளித்து உண்பது என்று தெரியாது. வேலை இயந்திரகதியில். உணர்ச்சிகள் என்பதே முகத்தில் தெரியாது. வந்து ஏழெட்டு வருடங்கள் ஆனாலும் யாருடனும் அதிகமான பழக்கம் வைத்துக்கொள்வதில்லை. காலையில் இருந்து வரவாகும் பணம் இரவில் பூட்டிய பெட்டியில் பக்கத்திலுள்ள காவல் செக்போஸ்டில் பத்திரமாக இருக்கும். அடுத்த நாள் எட்டரை மணி வண்டியில் வங்கிக்கு போய்விடும். பட்டுவாடா செய்ய வேண்டிய பணம் கணக்கு வைத்துள்ள கடைகளுக்கு நேரே கொடுக்க பட்டுவிடும். எங்கும் யாரிடமும் கடனும் இருக்காது, கடன் கொடுப்பதும் கிடையாது. காவலருக்குக்கூட கடனோ இலவசமோ கிடையாது.
மனைவி பின்பக்கம் இருந்த தடுப்பிலிருந்து வெளியே வருவது அபூர்வம். கைமணம் செய்யும் உணவில் தெரியும். அளவான ஓட்டத்துடன் சுப்பையா நிறுத்திக்கொள்வார். என்ன கூட்டம் வந்தாலும் மறு அடுப்பு ஏற்றுவது கிடையாது. பல நாட்கள் தாமதமாக வருபவர்கள் ஏதும் கிடைக்காமல் போகவெண்டியதுதான்.
காலை அய்ந்து மணிக்கெல்லாம் கறந்த பால் உலையில் காய ஆரம்பிக்கும். சுப்பையாவின் தேத்தண்ணீர் ஒரு மணமாகவும். சுவையாகவும் இருக்கும். பேருந்திலும் சிற்றுந்திலும் மலை வேலைக்கும், சுற்றுலாவுக்கும் செல்லும் மக்கள் அவர் கடையில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கினர்.
சுப்பையா அதிகாலை நான்கு நான்கரைக்கெல்லாம் எழுந்து பல் துலக்கியபடி வெளியே போய்விட்டு வரும் நேரத்தில் அவர் மனைவி குளித்து அடுப்பு பற்ற வைத்து இட்லி கடையை ஆரம்பித்து விடுவாள்.
காலையில் முதல் வண்டியில் வரும் கூட்டம் இட்லி வடையுடன் டீ, காபி சாப்பிடும்.
ஒன்பதரைக்கெல்லாம் டிபன் முடிந்து வடை தொடங்கும். டீயும் காப்பியும் ஒரு ஆறு, ஏழு லிட்டர் பால் தீரும் வரை ஓடும்.
வாடிக்கையாளர் சிலருக்கு மட்டும் மதிய சாப்பாடு, மற்றவர்களுக்கு மீந்து போன வடைதான் கிடைக்கும்.சுப்பையா மதியம் கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பார். பின்பு மலை இறங்குபவர்கள் மற்றும் வேலைமுடிந்து திரும்புவர்களுக்கும் பலகாரம் டீ காபி கிடைக்கும். மாலை மயங்க கடை ஏறக்கட்டப்படும்.
சுப்பையா முன்பு கொஞ்சம் தூரத்திலுள்ள சிறு நகரத்தில் பெரிய வணிகர். சிறு வயதில் ஒரு பெரிய கடையில் வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சொந்த வியாபாரம் ஆரம்பித்து நன்றாகவே வளர்ந்தார். திடீரென்று ஒரு நாள் நஷ்டம் வந்த பொழுது எல்லாவற்றையும் பிரித்து கொடுத்து விட்டு வந்து விட்டார். நஷ்டத்திற்கு காரணம் அவரது மாமனார். சுப்பையாவின் முன்னாள் முதலாள. அவரது உழைப்பையும், வியாபார நேர்த்தியையும் பார்த்து விட்டு அவருக்கு பெண் கொடுத்தவர். மாமனார் எண்ணம் அப்படியே கூட வைத்துக்கொள்வதுதான். ஆனால் கல்யாணம் முடிந்தவுடனே சுப்பையா வெளியே வந்து கடை போட்டு நன்றாகவே வளர்ந்தார். மாமனாருக்கு உள்ளெ வருத்தம் இருந்தாலும் மருமகனுடன் நல்ல உறவும் மரியாதையுமே இருந்தது. மாமனார் ஒரு வியாபரத்தில் கூட்டு சேரச்சொன்னார். சுப்பையாவுக்கு பிரியமில்லை. மாமனாருக்கு வருத்தம். அந்த வியாபாரம் கடும் நஷ்டம். மாமனார் எல்லாவற்றையும் இழக்க வே̀ண்டிய நிலைமை. சுப்பையா அவர் சொத்தை விற்று எல்லாவற்றையும் கடனை அடைத்தார். கட்டிய வேட்டியுடன் மாமனார் முன்பு வந்து இருந்த வீட்டின் பத்திரத்தை கொடுத்துவிட்டு கிளம்பினார். அவர் நினைத்தது அவர் மனைவியையும் விட்டு விட்டு போவது என்று. அவர் மனைவி அவருடனே நடந்தாள்.
̀அங்கு புறப்பட்டவர் வந்து இறங்கியது அந்த ரோட்டோரத்தில். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு சென்று பிள்ளைகளை பார்த்து விட்டு வருவார்கள்.
வாழ்க்கை வேறு பாதையில் போனாலும் தடம் புரளவில்லை.
நாட்கள்.வாரங்கள் மாதங்கள் வருடங்களாயின. வந்த பணம் மாமனாரின் மிஞ்சிய கடனை அடைக்கவும் , அவருக்கு உதவுமே செலவளிந்தது. சுப்பையா யாருடனும் ஒட்டுவதில்லை. பேச்சு சிரிப்பு எல்லாம் அன்னியமாயின.
காலம் அதன் போக்கில் போனது. வாழ்க்கை அதனுடன். சுப்பையா தேனீரிலும், அவர் மனைவி அடுப்புடனும் வாழ்க்கையை ஓட்டினர். அவர்கள் குழந்தைகளை மனைவியின் தம்பியிடம் விட்டிருந்தனர். அவர்களைக்கூட அபூர்வமாகத்தான் சென்று பார்த்தனர். கடை, கடை மட்டுமே வாழ்க்கை ஆகி விட்டது. சக்கரம், செக்கு போல அவர்கள் வாழ்க்கையும் ஒரு வட்டத்திற்குள்.
அன்றும் அவர்கள் காலை வழக்கம் போலவே விடிய ஆரம்பித்தது.
சுப்பையா அன்று வழக்கம் போலவே வாயில் பல்குச்சியுடன் சாலை ஓரமாக வெளியில் போக நடந்தார். பொழுது இன்னும் புலராமல் இருட்டு இன்னும் மிஞ்சியிருந்தது. சிறிது தூரத்தில் மரத்தில் மோதி ஒரு வண்டி. ஓடிப்போய் உள்ளே பார்த்தபொழுது முன்னிருக்கையில் வண்டியோட்டியும் ஒரு பெரியவரும். பின்னிருக்கையில் ஒரு நடுத்தர வயதுப்பெண். பெரியவரின் மனைவியாக இருக்க வேண்டும். அடி பட்ட காயங்களுடன், மயக்கமாக. அப்பெண் கழுத்து, கை முழுவதும் நகைகள்.
சுப்பையா சிறிது தயங்கி பின் நகைகளையெல்லாம் கழட்டி பக்கத்தில் இருந்த மரத்தின் மேலே மறைத்து வைத்தார்.
கீழே இறங்கி வந்து வேகமாக ஓடி செக்போஸ்டில் உள்ள காவலரிடம் சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு ஓடி வந்தார். அதன் முன் ஆம்புலன்ஸுக்கு தொலபேசியில் அழைத்துவிட்டு.
அடிபட்டவர்களை வண்டியில் இருந்து வெளியே எடுக்கும் பொழுதே வண்டி வர, எல்லோரையும் போட்டு அவர்களுடன் மருத்துவ மனைக்கு ஓடினார் சுப்பையா.
அன்று கடையை அவர் மனைவி பார்த்து க்கொண்டாள். அவர் அடிபட்டவர்களின் சொந்தங்களை கண்டு பிடித்து தகவல் கொடுக்க அவர்கள் வந்த பிறகு கடைக்கு திரும்பினார்.மீண்டும் வாழ்க்கை பழைய நிலையில். தேனீர் அடுப்பு, வடை செட்டி, கல்லாபெட்டி, கடைக்குள் படுக்கை. நாட்கள் வாரங்களாகி மாதமும் ஆயின.
ஒரு நாள் சுப்பையா கடைக்கு முன், நான்கைந்து வண்டிகளில் ஆட்கள் வந்து இறங்கினர். வழக்கமான ஆட்களல்ல. அவர்களின் வசதியும், தரமும் உடுத்தியிருந்த உடைகளிலும், அணிந்திருந்த நகைகளிலும் தெரிந்தது. அவர்களில் அடிபட்ட பெரியவரும், அந்த அம்மாவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் பணம், துணி மற்றும் நகைகள்.
அடிபட்டு சுப்பையாவால் காப்பாற்றப்பட்டவரும் அவர் மனைவியும் செல்வசெழிப்புள்ள குடும்பத்தின் மூத்தவர்கள். பெரியவர் உண்டாக்கி காப்பாற்றி வரும் தொழிலும், பணமும் அவரை அவர் குடும்பத்திலும், ஊரிலும் அவருக்கு ஒரு மதிப்பையும் மரியாதையையும் கொடுத்தது.
அவர்கள் சுப்பையாவின் கடையில், அந்நியமாகவும், வித்தியாசமாகவும் தெரிந்தனர். பெரியவருக்கு சுப்பையாவைப்பற்றி முன் தெரியாவிட்டாலும் இப்பொழுது விசாரித்து தெரிந்தே வந்திருந்தார். அவர் பரிமாற்றம் சுப்பையாவின் முன்னாள் நிலையை மனதில் வைத்து.
சுப்பையாவின் சுகம், மற்றும், நடத்தும் தொழிலில் உள்ள நிலவரங்களை க்குறித்து சம்பிரதாயமான விசாரிப்புகள். அவர்களிடையே பேச வேண்டிய விஷயதிற்கு வருவதற்கு ஏதோ தயக்கம். அது அவர்களை தயங்க வைத்தது.
பெரியவர் தயங்கி தயங்கி விஷயத்திற்கு கடைசியில் வந்தார். அவர் கண்ணைக்காட்ட கூட வந்தவர்கள் ஒரு பெரிய தாம்பாளத்தை எடுத்து வைத்து அதில் பழம், தேங்காயுடன் புது வேட்டி, சட்டை, பட்டு புடவை, துணித்துண்டு, அவற்றுடன் பணக்கட்டு.
எடுத்து முன்வைத்து " தயவு செஞ்சு ஏத்துக்கணும், எங்க உயிரையும் உடமையையும் காப்பத்தினதுக்கு.”
சுப்பையா அவரைப்பார்த்த பார்வையில், எல்லோர் முகமும் மாறியது.எடுத்து வைத்த பொருட்கள் மறுபடியும் பைக்குள் போயின. அப்ப வரங்க என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டனர்.
டீக்கு பதினேழு ரூபா நாப்பது பைசா என்று ஒரு உணர்வும் இல்லாத குரலில் சுப்பையா. கொடுத்து விட்டு புறப்பட்டு வண்டியில் ஏறினர்.
பெரியம்மா கணவரிடம், பொட்டு தங்கம் கூட குறையாமல் பத்திரமா கொடுத்த மனுஷன் பைசா கூட வாங்கிக்கலை. ஆனா அல்பமா டீக்கு காசு கேட்டிட்டானே என்றாள்.
கணவர் சிரித்துக்கொண்டே ஏண்டீ நம்ம காசு அவனுக்கு வேணாமின்னா அவங்காசையுமா
நமக்கு விட்டு கொடுக்கணும். என்றார். சுப்பையாவை புரிந்த ஒரு மனுஷன்.
வண்டி புறப்பட்டது.
No comments:
Post a Comment